தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 26 Jan 2022 8:07 PM GMT (Updated: 26 Jan 2022 8:07 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

உடனடி நடவடிக்கை
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பேரூராட்சி காளிப்பட்டி கிராமத்தில் குடிநீர் பிரச்சினை இருந்தது. இதுதொடர்பாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. உடனே அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கினர். இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’க்கும் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.
-ஊர்மக்கள், காளிப்பட்டி, நாமக்கல்.
பழுதான மின்மோட்டார்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி 11-வது வார்டு கூட்டப்பள்ளி கால்நடை ஆஸ்பத்திரி எதிரில் அருந்ததியர் தெருவுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டார் மூலம் நீண்ட நாட்களாக அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அங்குள்ள மின்மோட்டார் பழுதாகி  இருப்பதால் மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி பழுதான மின்மோட்டாரை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.மணி, கூட்டப்பள்ளி, நாமக்கல்.
மதுபிரியர்களால் தொல்லை
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் டாஸ்மாக் கடைகள் மட்டும் அல்லாமல் சந்து கடைகளில் பதுக்கி வைத்தும் மது விற்பனை நடக்கிறது. இதனால் மதுபிரியர்கள் எந்த நேரமும் மதுவை குடித்துவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். குறிப்பாக கிராமப்பகுதி மக்கள் கடும் வேதனைக்கு ஆளாகின்றனர். எனவே பதுக்கி வைத்து மது விற்பனை செய்வதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்பகுதிகளில் போலீசார் ரோந்து சென்று தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
-ஊர்மக்கள், வாழப்பாடி, சேலம்.
நோய் பரவும் அபாயம் 
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா 11-வது வார்டு அம்மன் நகரில் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் செல்ல வழியில்லாததால் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஊர்மக்கள், அம்மன் நகர், சேலம்.

சேலம் கலெக்டர் பங்களா பின்புறம் ஆத்துக்காடு செல்லும் வழியில் அவுசிங் போர்டு ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் அங்கு மாடுகளை கட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அங்கேயே குப்பைகளை கொட்டுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சதீஷ்குமார், கோரிமேடு, சேலம்.
அடிப்படை வசதிகள் வேண்டும்
சேலம் மணியனூர்  வி.எம்.நகரில் சாக்கடை கால்வாய், தார் சாலை என எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் அந்த பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மழைக்காலங்களில் டெங்கு, மலேரியா போன்ற நோய்களால் குழந்தைகள் அடிக்கடி பாதிக்கப்படுகிறார்கள். இதுபற்றி புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே குறிப்பிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர முன்வர வேண்டும்.
-சேகர், வி.எம்.நகர், சேலம்.

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் 20 ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் தெரு விளக்கு, சாலை வசதி, குப்பைதொட்டி, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. மண் சாலையாக இருப்பதால் வீடுகளில் மண்ணும், தூசியும் நிறைந்து காணப்படுகிறது. இதனால் பலருக்கு சுவாச பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், தர்மபுரி.
குப்பைதொட்டி வேண்டும்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா தின்னூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் ஆங்காங்கே குப்பைகளை கொட்டுகின்றனர். சிலர் குப்பையை தீ வைத்து எரிக்கிறார்கள். இதுபற்றி அதிகாரிகளிடம்  மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மக்களின் நலன் கருதி அதிகாரிகள் கவனம் செலுத்தி அங்கு குப்பை தொட்டி வைத்து தினமும் குப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும்.
-பாஸ்கர், தின்னூர், கிருஷ்ணகிரி.
கழிவுநீரில் மின்கம்பம் 
சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் 6-வது கிராஸ் பேச்சியம்மன் நகரில் தேங்கி நிற்கும் கழிவுநீரில் மின் கம்பம் அமைந்துள்ளது. இதனால் எந்த நேரம் வேண்டுமானாலும் மின்கம்பம் சாய்ந்து அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை மாற்றி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜ்குமார், கிச்சிப்பாளையம், சேலம்.

Next Story