குடியரசு தின விழா கொண்டாட்டம்-கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்


குடியரசு தின விழா கொண்டாட்டம்-கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்
x
தினத்தந்தி 26 Jan 2022 8:13 PM GMT (Updated: 26 Jan 2022 8:13 PM GMT)

கரூரில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

கரூர், 
குடியரசு தினவிழா
73-வது குடியரசு தினவிழாவையொட்டி கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அனைவரிடமும் சமத்துவம் நிலவும் வகையில் சமாதான புறாக்களையும், தேசிய கொடி வண்ணத்திலான பலூன்களையும் பறக்கவிட்டார்.
அரசின் வழிகாட்டி நெறிமுறைகளின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கொரோனா கட்டுப்பாடு பணிகள், முன்கள பணிகள், அலுவலக பணிகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், மருத்துவர்கள், போலீசார், வருவாய்த்துறை மற்றும் வளர்ச்சித்துறை அலுவலர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் நற்சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
அரசு நலத்திட்ட உதவிகள்
இதனைத்தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் இலவச வீட்டுமனை பட்டா 8 பேருக்கும், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் எம்ராய்டரி தையல் எந்திரம் 2 பேருக்கும், தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ரூ.12.68 லட்சம் மதிப்பிலான கடன் உதவி 2 பேருக்கும், வேளாண்மை துறையின் மூலம் இடுபொருட்கள் 2 பேருக்கும், தோட்டக்கலைத்துறையின் மூலம் இடுபொருட்கள் 2 பேருக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை மூலம் பிரதம மந்திரி குடியிருப்பு ஊரக திட்டத்தின் கீழ் வேலை உத்தரவு ஆணைகள் 19 பேருக்கும், கூட்டுறவு துறை மூலம் ஆதரவற்ற விதவைகளுக்கான கடன் உதவி 2 பேருக்கும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் 3-ம் பாலித்தனவருக்கான அடையாள அட்டை 2 பேருக்கு என மொத்தம் 62 பயனாளிகளுக்கு ரூ.48 லட்சத்து 57 ஆயிரத்து 970 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
பாராட்டு சான்றிதழ்
மேலும், அரசுத்துறை அலுவலர்களுக்கு அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி ஓட்டப்பந்தயம், வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் நினைவு பரிசுகளை வழங்கினார். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் கலெக்டர் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை பெற்ற அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் பிளாஸ்டிக்கை ஒழிக்க உறுதியேற்கும் வகையில் மஞ்சப்பைகளையும், குடியரசு தினத்தின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்திய அரசமைப்பின் முகவுரையினையும் நினைவுப்பரிசாக கலெக்டர் வழங்கினார்.
நினைவுப்பரிசு
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துச்செல்வன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சைபுதீன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து கரூர் வாங்கப்பாளையம் பகுதியில் உள்ள மறைந்த சுதந்திர போராட்ட தியாகி முத்துச்சாமி என்ற காளிமுத்துவின் வீட்டிற்கு கலெக்டர் பிரபுசங்கர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் ஆகியோர் நேரில் சென்று, சுதந்திர போராட்ட தியாகியின் மனைவி பழனியம்மாளுக்கு நினைவுப்பரிசு வழங்கி, பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்கள்.
கரூர் மாநகராட்சி
கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தேசியகொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஆசாத் பூங்காவில் உள்ள காந்திசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மாநகராட்சி பொறியாளர் நக்கீரன், மாநகர நல அலுவலர் லட்சிய வர்ணா, மாநகர அமைப்பு அலுவலர் சிவக்குமார், மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story