பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்: 6 பேர் மறுவாழ்வு பெற்றனர்


பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்: 6 பேர் மறுவாழ்வு பெற்றனர்
x
தினத்தந்தி 26 Jan 2022 8:33 PM GMT (Updated: 26 Jan 2022 8:33 PM GMT)

விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டது. இதனால் 6 பேர் மறுவாழ்வு பெற்றனர்.

தாவணகெரே: விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டது. இதனால் 6 பேர் மறுவாழ்வு பெற்றனர்.

மூளைச்சாவு

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் கூடல் கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சுண்டப்பா. இவரது மனைவி இந்திரம்மா கும்மனூரு (வயது 54). நேற்று முன்தினம் மாலை நடந்த சாலை விபத்தில் இந்திரம்மா படுகாயத்துடன் தாவணகெரேயில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் உடுப்பி மாவட்டம் மணிப்பாலில் உள்ள கஸ்தூரிபா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் மூளைச்சாவு அடைந்தார். 

இதையடுத்து அவரது கணவர் நஞ்சுண்டப்பா, மனைவியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தார். இதுபற்றி அவர் டாக்டர்களிடம் கூறினார். அதையடுத்து இந்திரம்மாவின் இருதயம், இதயவால்வுகள், நுரையீரல், சிறுநீரகங்கள், கண்கள் அறுவை சிகிச்சை செய்து தானமாக பெறப்பட்டது. 

விமானத்தில் பறந்த இதய வால்வுகள்

இதில் 2 கண்களும், ஒரு சிறுநீரகமும் கஸ்தூரிபா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் என்னிபே ஆஸ்பத்திரி நோயாளிக்கும், இருதயம் மங்களூரு எம்.ஜி.எம். ஆஸ்பத்திரி நோயாளிக்கும், இதய வால்வுகள் சென்னையில் உள்ள நோயாளிகளுக்கும் என மொத்தம் 6 பேருக்கு பொருத்தப்பட்டது. 

இதன் மூலம் 6 பேர் மறுவாழ்வு கிடைத்து இருப்பதாக கஸ்தூரிபா ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. உடுப்பியில் இருந்து இதய வால்வுகள் ஜீரோ போக்குவரத்து மூலம் மங்களூரு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்டு நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story