பெண்ணிடம் நகை திருடிய 3 பேர் கைது


பெண்ணிடம் நகை திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 27 Jan 2022 4:52 PM GMT (Updated: 27 Jan 2022 4:52 PM GMT)

பாலீஷ் செய்வதாக நூதனமுறையில் தங்கத்தை திரவமாக மாற்றி பெண்ணிடம் நகை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமேசுவரம், 
பாலீஷ் செய்வதாக நூதனமுறையில் தங்கத்தை திரவமாக மாற்றி பெண்ணிடம் நகை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
4 பவுன்
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாரதியார் நகர் தெருவை சேர்ந்தவர் சிவகுருநாதன். மீனவர். இவருடைய மனைவி சிவசங்கரி (வயது 28). இவரிடம் வடமாநில வாலிபர்கள் 3 பேர் தங்க நகையை பாலீஷ் செய்து தருவதாக கூறி 4 பவுன் நகையை பெற்று பாலீஷ் செய்துள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த அந்த பெண் தங்க நகையை வாங்கி பார்த்ததில் எடை குறைவாக இருப்பது தெரியவந்தது. 
இதற்கிடையே அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அதில், பீகார் மாநிலத்தை சேர்ந்த குந்தன்குமார் (25) என்பவரை மட்டும் பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீ சாரிடம் ஒப்படைத்தனர். 
பாம்பன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வர்களை அவர்களது செல்போன் நம்பரை வைத்து தேடி வந்தனர். இதனிடையே தப்பியோடிய வாலிபர்கள் புதுக்கோட்டையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 
கைது
இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் ராமேசுவரம் தனிப்பிரிவு சப்-இன்ஸ் பெக்டர் நல்லுசாமி மற்றும் போலீசார் ரமேஷ், காளிமுத்து உள்ளிட்டோர் புதுக்கோட்டைக்கு சென்று பஸ் நிலையம் அருகே உள்ள தங்கும் விடுதியில் இருந்த பீகாரை சேர்ந்த பிவின்குமார் (26), பப்புகுமார் (25) ஆகியோரை கைது செய்தனர். 
அவர்களிடம் நடத்திய விசாரணையில் தங்க நகையை பாலீஷ் செய்வதாக பெற்று ரசாயனம் மூலம் அவற்றை வடமாநில வாலிபர்கள் தங்கத்தை திரவமாக மாற்றி நூதன முறையில் திருடியது தெரியவந்தது.

Next Story