தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 27 Jan 2022 5:30 PM GMT (Updated: 27 Jan 2022 5:30 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-


தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:- 


மரக்கிளைகளால் ஆபத்து

கோவை டாடாபாத் ஆறுமுக்கு சந்திப்பு பகுதியில் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மரக்கிளைகள் வெட்டி போடப்பட்டு உள்ளன. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால், சாலையின் நடுவே தடுப்புச்சுவரில் உள்ள மரக்கிளைகளால் எந்த நேரத்திலும் விபத்து நடக்கும் அபாயம் நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து அங்கு போடப்பட்டு உள்ள மரக்கிளகைளை அகற்ற வேண்டும்.

  சாந்தினி, டாடாபாத்.

பழுதான குடிநீர் தொட்டி

  கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட மச்சிக் கொல்லி பேபி நகர் பகுதியில் குடிநீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டி கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆவதால் மிகவும் பழுதான நிலையில் இருக்கிறது. இதனால் இந்த தொட்டி இருந்தும் வீணாகதான் இருந்து வருகிறது. எனவே அந்த குடிநீர் தொட்டியை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
  ஜுனைஷ் பாபு, மச்சிக்கொல்லி

தெரு நாய்கள் தொல்லை

  கோத்தகிரி தாசில்தார் அலுவலக வளாகத்தில் 20-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் முகாமிட்டு உள்ளன. இவை கோர்ட்டு மற்றும் தாசில் தார் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களை துரத்திக் கடிக்க வருவ தால் அங்கு வந்து செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார் கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
  கண்ணன், கோத்தகிரி

இரவு ரோந்து பணி

  சுல்தான்பேட்டை ஒன்றியம் ஜல்லிபட்டி, வதம்பச்சேரி, வாரப்பட்டி, செலக்கரிச்சல் ஆகிய பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகளில் அடிக்கடி சிறு, சிறு திருட்டு சம்பவம் நடந்து வருகிறது. அத்துடன் இந்தப்பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி, கள் விற்பனையும் நடக்கிறது. இந்த சமூக விரோத செயல்பாடுகளை தடுக்க சுல்தான் பேட்டை போலீசார் இரவு நேர ரோந்துப்பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
  பழனிசாமி, சுல்தான்பேட்டை.

வர்ணம் பூச வேண்டும்

  கிணத்துக்கடவு அருகே கோதவாடி ஊருக்குள் சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதில் வர்ணம் பூசப்படவில்லை. இதனால் அங்கு வேகத்தடை இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரியாததால், இரவு நேரத்தில் வேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வேகத்தை தடுக்க போடப்பட்டு உள்ள வேகத்தடையால் விபத்து ஏற்படுவைதை தடுக்க உடனடியாக வேகத்தடையில் வெள்ளை நிற வர்ணம் பூச வேண்டும்.
  சுரேஷ்குமார், கோதவாடி.

வாகன ஓட்டிகள் அவதி

  பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் குழிகளில் வாகனங்கள் சிக்கி தடுமாறி விழுந்து விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பிரபு, ஆனைமலை

சுகாதார சீர்கேடு

  பொள்ளாச்சி அருகே ஜமீன் முத்தூரில் சாலையோரத்தில் குப்பைகள் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பைகளை முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பாரதி, பொள்ளாச்சி.

வழிந்தோடும் கழிவுநீர்

  ஊட்டி பிங்கர்போஸ்ட் கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அரசு அலுவலகங்களுக்கு வந்து செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். அத்துடன் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் நிலவி வருகிறது. எனவே, வழிந்தோடும் கழிவுநீரை சரி செய்ய வேண்டும்.
  பிரேமா, தலைகுந்தா.

திறந்தவெளி கழிப்பிடம்

  ஊட்டி மத்திய பஸ் நிலைய பாறை முனீஸ்வரர் கோவில் அருகே நடைபாதை செல்கிறது. இந்த நடைபாதை திறந்தவெளி கழிப்பிடமாக மாறி உள்ளது. மேலும் மதுபிரியர்கள் மது அருந்தி விட்டு காலி பாட்டில்களை தூக்கி வீசிச் செல்கின்றனர். இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை. ஆகவே, நடைபாதையை சுத்தம் செய்து பொதுமக்கள் சென்று வர வழிவகை செய்ய வேண்டும்.
  கண்ணன், பிங்கர்போஸ்ட்.

சாக்கடைக்குள் செல்லும் குடிநீர் குழாய் 

  கூடலூர் அக்ரஹாரம் தெருவில் குடிநீர் குழாய்கள் கழிவுநீர் சாக்கடைக்குள் செல்கிறது. இதனால் குடிநீர் சுகாதாரமின்றி காணப் படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த குடிநீரை குடித்து தொற்றுநோய் பரவுவதற்கு முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய், சாக்கடை கால்வாய்க்குள் செல்வதை தடுக்க வேண்டும். 
  எஸ்.கே.ராஜ், கூடலூர்.

  
  
  
  


Next Story