கரும்பு அரவையை கதிர்ஆனந்த் எம்பி தொடங்கி வைத்தார்


கரும்பு அரவையை கதிர்ஆனந்த் எம்பி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 27 Jan 2022 5:33 PM GMT (Updated: 27 Jan 2022 5:33 PM GMT)

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை கதிர்ஆனந்த் எம்பி தொடங்கி வைத்தார்

திருவலம்

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை கதிர்ஆனந்த் எம்பி தொடங்கி வைத்தார்

வேலூர் மாவட்டம், திருவலம் அருகே அம்முண்டி பகுதியில், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் இந்தாண்டுக்கான கரும்பு அரவையை  கதிர் ஆனந்த் எம்.பி. தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா, ஆலையின் தலைவர் குப்பத்தாமோட்டூர் ஆனந்தன், காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வள்ளிமலை வேல்முருகன், காட்பாடி ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் தணிகாசலம், சரவணன், ராஜேந்திரன், ஆலையின் முன்னாள் தலைவர் கோரந்தாங்கல் குமார் மற்றும் ஆலையின் நிர்வாக குழு உறுப்பினர்கள், அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், கரும்பு விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கரும்பு அரவை குறித்து, ஆலையின் தலைவர் குப்பத்தா மோட்டூர் ஆனந்தன் கூறுகையில், இந்தாண்டு வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 1,15,000 மெட்ரிக் டன் கரும்புகள் அரவைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன. 

மேலும் கள்ளக்குறிச்சி-1-ல் இருந்து 10 ஆயிரம் மெட்ரிக் டன்னும், கள்ளக்குறிச்சி-2-ல் இருந்து 20 ஆயிரம் மெட்ரிக் டன்னும், ஆம்பூரில் இருந்து 20 ஆயிரம் மெட்ரிக் டன்னும் கரும்பு அரவைக்காக வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு வரும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆலையில் பதிவு செய்யப்படாத சுமார் 20 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்புகள் அரவைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலை அரவையின் போது எந்திரங்கள் பழுது ஏற்படாமல் தொடர்ந்து நடைபெற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் ரூ.2½ கோடி மதிப்பில் சர்வீஸ் செய்யப்பட்டுள்ளது. சுமார் 3½ மாதங்கள் அரவை நடைபெறும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாண்டு அரவையின் மூலம் சுமார் 2 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரையும், சுமார் 1500 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்றார்.

---
2 காலம்

Next Story