தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன அம்மா உணவகத்தில் பெயர் பலகை மறைப்பு; அரசியல் கட்சியினரின் சுவரொட்டிகள் கிழிப்பு


தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன அம்மா உணவகத்தில் பெயர் பலகை மறைப்பு; அரசியல் கட்சியினரின் சுவரொட்டிகள் கிழிப்பு
x
தினத்தந்தி 27 Jan 2022 6:38 PM GMT (Updated: 27 Jan 2022 6:38 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அம்மா உணவகத்தில் பெயர் பலகை மறைக்கப்பட்டன. அரசியல் கட்சியினரின் சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டன.

புதுக்கோட்டை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய 2 நகராட்சிகளுக்கும், அன்னவாசல், அரிமளம், இலுப்பூர், கீரனூர், பொன்னமராவதி, ஆலங்குடி, கறம்பக்குடி, கீரமங்கலம் ஆகிய 8 பேரூராட்சிகளுக்கும் வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடைபெற உள்ளது. 
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தன. அதன்படி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நடத்தை விதிகள் அமல்படுத்தும் பணி தொடங்கியது.
அம்மா உணவகம்
புதுக்கோட்டையில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அம்மா உணவகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா புகைப்படம் பதாகை மூலம் மறைக்கப்பட்டும், பெயர் பலகையில் அம்மா என்ற பெயரையும் நகராட்சி ஊழியர்கள் மறைத்தனர். இதேபோல அரசியல் கட்சியினரின் சுவரொட்டிகளையும் கிழித்தனர். நலத்திட்ட பணிகளில் அரசியல் கட்சியினரின் பெயர் பலகை காகிததாள்கள் மூலம் மறைக்கப்பட்டன. தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல அறந்தாங்கி நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளிலும் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தும் பணி தொடங்கியது.

Next Story