கரூர் நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம்


கரூர் நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம்
x
தினத்தந்தி 27 Jan 2022 7:27 PM GMT (Updated: 27 Jan 2022 7:27 PM GMT)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. வேட்பாளருடன் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கரூர், 
வேட்புமனுத்தாக்கல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 19-ந் தேதி நடக்கிறது. வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கி வருகிற 4-ந் தேதி வரை நடக்கிறது. அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனு தாக்கல் செய்யலாம். 5-ந் தேதி மனுக்கள் பரிசீலனையும், 7-ந் தேதி வேட்பு மனுக்கள் திரும்ப பெற கடைசி நாள் ஆகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை கரூர் மாநகராட்சி மற்றும் குளித்தலை, பள்ளப்பட்டி, புகளூர் ஆகிய 3 நகராட்சிகள், புலியூர், உப்பிடமங்கலம், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, மருதூர், நங்கவரம், தோட்டக்குறிச்சி, பழையஜெயங்கொண்ட சோழபுரம் ஆகிய 8 பேரூராட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
வேட்பாளருடன் ஒருவர் மட்டும்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் கரூர் மாநகராட்சி ஆணையர் அலுவலகம், நகராட்சி ஆணையர்கள் அலுவலகம் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் அலுவலகங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.
வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும்போது வேட்பாளருடன் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
கொரோனா தொற்று
தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகங்கள் ஒவ்வொரு நாளும் வேட்புமனு தொடங்கும் முன்பு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். அலுவலகங்களின் முன்பு சோப்பு போட்டு கைகழுவ தேவையான வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அலுவலர்களும், வேட்புமனுதாக்கல் செய்ய வருபவர்களும் கட்டாயம் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
ஒரு வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல் செய்த பிறகே அடுத்த வேட்பாளர் அனுமதிக்கப்படுவார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வேட்பாளர்களாக போட்டியிட விரும்பும் பட்சத்தில் அவர்களுடைய முன்மொழிபவர் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம்.
கிருமி நாசினி
மாநில தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க அனைத்து நிகழ்வுகளிலும் சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசங்கள் அணிதல், சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவுதல் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும், தேர்தல் விதிமுறைகளையும் முறையாக பின்பற்றிட வேண்டும். 
மேலும், அரசியல் கட்சியினர் நேரில் சென்று வாக்கு சேகரிப்பதை தவிர்த்து ஊடகங்கள் வாயிலாக பரப்புரை மற்றும் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டால் கொரோனா தொற்று பரவாமல் கட்டுப்படுத்தலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
45 பறக்கும் படை குழுக்கள்
தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளின் முழுவிவரம் மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிக்க 45 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமீறல் மற்றும் தேர்தல் தொடர்பான புகார்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1800-425-5456 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக தெரிவிக்கலாம். 
கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை
வருகிற 31-ந்தேதி வரை அரசியல் கட்சிகளின் பேரணியோ, கூட்டங்களோ நடத்த அனுமதி இல்லை. வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேட்பாளருடன் அதிகபட்சமாக 3 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அரசியல் கட்சிகளின் உள் கூட்டரங்கு கூட்டங்களை கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்குட்பட்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்ற பிறகே நடத்த வேண்டும். தெருமுனைகளிலோ, சாலைப்பகுதிகளிலோ, ரவுண்டானாக்கள் அருகிலோ அரசியல் கட்சிகளின் கூட்டங்களை நடத்த அனுமதி இல்லை.
இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை. 
கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
கரூர் மாநகராட்சி 48 வார்டுகளுக்கான வேட்புமனுத்தாக்கல் கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
கரூர் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் 8 வார்டுகளுக்கு ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் என்ற அடிப்படையில் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள 6 அறைகள் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் வேட்பாளர்கள் மற்றும் முன்மொழிபவர்கள் தவிர மற்றவர்கள் உள்ளே வருவதை தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைப்பது குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story