‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 27 Jan 2022 8:23 PM GMT (Updated: 27 Jan 2022 8:23 PM GMT)

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குவிந்து கிடக்கும் குப்பைகள்
ஈரோடு மாவட்டம் சென்னப்பநாய்க்கன்பாளையத்தில் ரோட்டோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. உடனே குப்பைகளை அள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.
பொதுமக்கள், சென்னப்பநாய்க்கன்பாளையம்.

நாய்கள் தொல்லை
ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள நாச்சியப்பா வீதியில் தெருநாய்கள் ஏராளமானவை சுற்றி திரிகின்றன. அந்த வழியாக வாகனங்கள் மற்றும் நடந்து செல்பவர்களை துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லவே அச்சமாக உள்ளது. உடனே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, ஈரோடு.

ஆபத்தான குழி
ஈரோடு மூலப்பட்டறையில் இருந்து எல்லை மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் பார்க் ரோட்டில் ஏராளமான லாரி சேவை நிறுவனங்கள் உள்ளன. இந்த ரோட்டில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் தற்போது பெரிய குழி ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை  உள்ளது. குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் இரவு நேரங்களில் செல்லும்போது இந்த குழி இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி படுகாயம் அடைகிறார்கள். எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைப்பதுடன், ஆபத்தான குழியை மூடவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், மூலப்பட்டறை.

வீணாகும் குடிநீர்
ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தில் அம்மா உணவகம் உள்ளது. அம்மா உணவகம் அருகில் உள்ள ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து உள்ளது. இதனால் அதில் இருந்து குடிநீர் வெளியேறி வீணாக போய்க்கொண்டிருக்கிறது. எனவே அரசு அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கலீல் ரஹ்மான், பி.பி.அக்ரஹாரம்.

வேகத்தடை வேண்டும்
 ஈரோடு லக்காபுரம் புதுவலசு பகுதியில் எஸ் வடிவ வளைவிலான ரோடு செல்கிறது. இந்த ரோட்டில் வாகனங்கள் அடிக்கடி சென்று வருகிறது. இந்த வளைவுகளில் வாகனங்கள் திரும்பும்போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே விபத்தை தவிர்க்கும் வகையில் இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், புதுவலசு.

குடிநீர் குழாயில் உடைப்பு
கொடுமுடியில் இருந்து முத்தூர் செல்லும் ரோட்டில் ஒத்தக்கடை பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த குழாயில் இருந்து குடிநீர் வெளியேறி வீணாக செல்கிறது. எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.
பொதுமக்கள், ஒத்தக்கடை.

தார்சாலை அமைக்கப்படுமா?
கோபியில் இருந்து பாரியூர் செல்லும் ரோட்டில் டி.ஆர்.ஆர். நகர் உள்ளது. இந்த நகரில் உள்ள 2 பி என அழைக்கப்படும் சாலை மண் ரோடாக உள்ளது. இந்த சாலையை தார் ரோடாக மாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்த சாலை தார் ரோடாக மாற்றப்படவில்லை. எனவே இந்த சாலையை தார் ரோடாக மாற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், டி.ஆர்.ஆர்.நகர்.

பாராட்டு
கோபியை அடுத்த கலிங்கியம் ஊராட்சி நாகர்பாளையம் பகுதியில் உள்ள மின் கம்பத்தில் லாரி மோதியதில் சேதம் அடைந்திருந்தது. இந்த மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என ‘தினத்தந்தி’ நாளிதழின் புகார் பெட்டி பகுதியில் செய்தி பிரசுரமாகியது. இதைத்தொடர்ந்து சேதம் அடைந்த மின் கம்பம் மாற்றப்பட்டது. இதற்காக செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். 
பொதுமக்கள், நாகர்பாளையம்.

Next Story