காமராஜர் தலைவராக வீற்றிருந்த விருதுநகர் நகராட்சி


காமராஜர் தலைவராக வீற்றிருந்த விருதுநகர் நகராட்சி
x
தினத்தந்தி 27 Jan 2022 8:40 PM GMT (Updated: 27 Jan 2022 8:40 PM GMT)

காமராஜர் தலைவராக வீற்றிருந்த நூற்றாண்டு பெருமை கொண்டது விருதுநகர் நகராட்சி ஆகும்.

விருதுநகர், 

விருதுநகர்- தமிழக அரசியல் வரலாற்றிலும், சுதந்திர போராட்ட வரலாற்றிலும் தடம் பதித்த ஓர் நகரம். பெருந்தலைவர் காமராஜரை உலகுக்கு தந்த ஊர்.
தேசிய நெடுஞ்சாலையோரம் அமையப்பெற்ற வணிக நகரம். மாவட்ட தலைநகரம். இன்னும் பல சிறப்புகள் உள்ளன.
அதுவே விருதுநகர் நகராட்சி நிர்வாகத்தை எடுத்துக்கொண்டால், நகராட்சி அந்தஸ்தை பெற்று நூற்றாண்டை கடந்த நகரம். நகராட்சி தலைவராக பெருந்தலைவர் காமராஜரே வீற்றிருந்த வரலாற்றை கொண்ட நகரம் என மேலும் சிறப்புகள் கூடுகின்றன.
விருதுநகர் நகராட்சி மூலம் எத்தனையோ திட்டங்கள் அந்நகருக்கு கிடைத்துள்ளன. இப்போது வர இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் மூலம் கவுன்சிலர்கள், புதிய தலைவர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு பின்பு தேர்தல் நடைபெற இருப்பதால், புதிய வாக்காளர்கள் ஏராளமானோருக்கு இதுவே முதல் உள்ளாட்சி தேர்தலாக இருக்கும்.
முன்பு இருந்ததைவிட இப்போது தேர்தல் களங்கள் மாறி இருப்பதால் சுவாரசியங்களுக்கும் பஞ்சம் இல்லை.
பழம்பெருமை கொண்ட விருதுநகர் நகராட்சி கடந்து வந்த பாதையை ஓர் கண்ணோட்டமாக இங்கே நாம் விரிவாக அலசலாம்.
நூற்றாண்டு விழா
விருதுநகர் ஆரம்பத்தில் விருதுபட்டியாக இருந்தது நாம் அறிந்ததே. 1915-ம் ஆண்டு விருதுபட்டி, நகராட்சியாக உருவானது. 
தொடக்கத்தில் 3-ம் நிலை நகராட்சியாக இருந்தது. விருதுநகராகிய பின்பு அந்நகராட்சி 1956-ம் ஆண்டு 2-ம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து 1998-ம் ஆண்டு சிறப்புநிலை நகராட்சி அந்தஸ்தை பெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் இந்த நகராட்சி தான் பழமையானது ஆகும். 
2015-ம் ஆண்டு நகராட்சியின் நூற்றாண்டு நிறைவையொட்டி அந்த ஆண்டின் தொடக்கத்தில் அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, நகராட்சி பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்கு ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். அதன் மூலமே பழைய பஸ் நிலையம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டது. 
முதல் தலைவர்
கடந்த 1915-ம் ஆண்டு நகராட்சியாக உருவானபோது எப்.எச்.சீரக் என்பவர் முதல் தலைவராக பதவி வகித்தார். அதன் பின்னர் கடந்த 1921-ம் ஆண்டு எம்.எஸ்.பி.செந்திக்குமார் நாடார் நகராட்சி தலைவர் ஆனார். இவரைத் தொடர்ந்து கடந்த 26.2.1926-ல் முகமது இப்ராகிம் ராவுத்தர் நகராட்சி தலைவராக இருந்தார். 
நகராட்சியில் இதுவரை இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த இவர் ஒருவர் மட்டுமே தலைவராக இருந்துள்ளார். இதனால் தான், இன்றளவும் அவரது குடும்பம் சேர்மன் ராவுத்தர் குடும்பம் என்று அழைக்கப்படுகிறது. 
நகராட்சி கட்டிடம் 
விருதுநகர் நகராட்சி அலுவலக கட்டிடத்திற்கு கடந்த 6.4.1923-ம் ஆண்டு அப்போதைய உள்ளாட்சி துறை மந்திரி பனகல்ராஜா அடிக்கல் நாட்டியுள்ளார்.
கடந்த 2.11.1924-ம் ஆண்டு நகராட்சி கட்டிடம் அப்போதைய ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரான ஐ.சி.எஸ். அதிகாரி ராமமூர்த்தியால் திறந்து வைக்கப்பட்டது. அப்போது நகரசபைத்தலைவராக எம்.எஸ்.பி.செந்திக்குமார் நாடாரும், துணைத்தலைவராக வி.வி.சண்முக நாடாரும் பதவி வகித்துள்ளனர்.
நகராட்சி தலைவர் காமராஜர் 
 விருதுநகர் நகராட்சி தலைவராக இதுவரை 17 பேர் பதவி வகித்துள்ளனர். பெருந்தலைவர் காமராஜர் 31.5.1941 முதல் 31.3.1942 வரை நகராட்சித் தலைவராக பதவி வகித்தார். 
நகராட்சித் தலைவருக்கு காமரா–ஜர் போட்டியிட்டபோது, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றதற்காக சிறையில் இருந்தார். சிறையில் இருந்தபோதே நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 31.3.1942 அன்று நகராட்சி தலைவராக பொறுப்பேற்ற உடன் அன்றைய தினமே பதவி விலகினார். 
பதவியேற்றவுடன் 3 சாலைகளின் சீரமைப்பு பணிகளுக்கான தீர்மானத்தை நிறைவேற்றியவுடன் பதவி விலகினார்.
வி.வி.ராமசாமி 1931 முதல் 1947 வரையிலும், எம்.எஸ்.பி.ராஜா 1955 முதல் 1969 வரையிலும் 3 முறை தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர். 
வி.வி.ராமசாமி பின்னாளில் எம்.எல்.சி. ஆனார். விருதுநகர் நகரசபைத் தலைவராக இருந்த ஆர்.சொக்கர் பின்னாளில் விருதுநகர் மற்றும் சிவகாசி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேரடி தேர்தல்
கடந்த 1991-ம் ஆண்டு வரை நகராட்சித்தலைவர் மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த நிலையில் 1996-ம்ஆண்டு நகரசபைத்தலைவர்கள் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 விருதுநகர் நகராட்சியின் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவராக சாரதா விஜயகுமாரி வெற்றி பெற்றார். அவரை தொடர்ந்து 2001-ம் ஆண்டு அமுதா தர்மராஜன் நேரடி தேர்தல் மூலம் வெற்றி பெற்றார். 2006-ம் ஆண்டு மீண்டும் மறைமுக தேர்தல் நடைமுறைக்கு வந்தபோது கார்த்திகா கரிக்கோல்ராஜ், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்று நகரசபை தலைவரானார்.
 மீண்டும் 2011-ம் ஆண்டு நகரசபை தலைவர் பதவிக்கு நேரடி தேர்தல் முறை அமல்படுத்தப்பட்டது. அந்த தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த சாந்தி மாரியப்பன், தி.மு.க. சார்பில் இந்திரா தனபாலன், காங்கிரஸ் சார்பில் கார்த்திகா கரிக்கோல்ராஜ், ம.தி.மு.க. சார்பில் லதா, பா.ம.க. சார்பில் ஜானகி, தே.மு.தி.க. சார்பில் சகாயமேரி, சுயேச்சை வேட்பாளர்களாக மகேஸ்வரி, லாவண்யா ஆகியோர் போட்டியிட்டனர்.
அ.தி.மு.க. வெற்றி 
இதில் அ.தி.மு.க. வேட்பாளர் சாந்தி மாரியப்பன் வெற்றி பெற்றார். விருதுநகர் நகராட்சிக்கு முதன் முறையாக அ.தி.மு.க.வை சேர்ந்தவர் நகரசபை தலைவர் ஆனார். துணைத்தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த மாரியப்பன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி விருதுநகர் நகராட்சி மக்கள் தொகை 72 ஆயிரத்து 296.
வாக்காளர் கணக்கு என்று எடுத்துக்கொண்டால், 2011-ம் ஆண்டு தேர்தலின் போது விருதுநகர் நகராட்சியில் மொத்த வாக்காளர்கள் 52,818 பேர். இதில் ஆண்கள் 26,150 பேர், பெண்கள் 26,768 பேர். பதிவான வாக்கு சதவீதம் 73.28 ஆகும். அதிகபட்சமாக 25-வது வார்–டில் 88.5 சதவீதமும், குறைந்த பட்சமாக 4-வது வார்டில் 69.09 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
கூடிய வாக்காளர் எண்ணிக்கை 
 தற்போதைய வாக்காளர்கள் எண்ணிக்கை 63,964 ஆகும். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
வாக்காளர் பட்டியலை பொருத்தமட்டில் குழப்பம் நிலவுவதாக புகார்கள் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்பட்டு உள்ளது. எனவே வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விருதுநகர் நகராட்சியை பொருத்தமட்டில் கார்த்திகா கரிக்கோல்ராஜ் நகரசபைத் தலைவராக இருந்தபோது நகராட்சியை, மாநகராட்சியாக மாற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அருகில் உள்ள பஞ்சாயத்துக்களை இணைக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனாலும் பஞ்சாயத்து நிர்வாகங்கள் இதற்கு ஒப்புதல் அளிக்காததால் இந்த முயற்சி கைகூடவில்லை.

வார்டுகள்
 நகராட்சியின் மொத்த பரப்பளவு 1,578 ஏக்கராகும். நகராட்சியில் வார்டு மறுசீரமைப்புக்கு முன்பும், பின்பும் 36 வார்டுகள் உள்ளன. இதுவரை விருதுகர் நகரசபை தலைவர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. 
இம்முறை அதற்கான முயற்சிகளில் தி.மு.க.வினர் முனைப்புடன் உள்ளனர். அதே நேரத்தில் கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று கேட்கப்படும் நிலையும் உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியை பொருத்தமட்டில் பா.ஜ.க.வினர் மாவட்டத்தில் இரண்டு நகராட்சிகளை பெறவேண்டும் என்பதில் முனைப்புடன் உள்ளதாக கூறப்படுகிறது. எது எப்படியோ இது சம்பந்தமான பேச்சுவார்த்தையில் கூடிய விரைவில் அரசியல் கட்சிகள் முனைப்பு காட்ட தொடங்கிவிடும்.

Next Story