மேகதாது அணை திட்டத்தை அமல்படுத்த 5 கிராம மக்களை வெளியேற்ற முடிவு


மேகதாது அணை திட்டத்தை அமல்படுத்த 5 கிராம மக்களை வெளியேற்ற முடிவு
x
தினத்தந்தி 27 Jan 2022 9:02 PM GMT (Updated: 27 Jan 2022 9:02 PM GMT)

மேகதாது திட்டத்தை அமல்படுத்த வசதியாக 5 கிராமங்களை சேர்ந்த மக்களை வெளியேற்ற கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் அனுமதி கிடைத்ததும் பணிகளை விரைவாக தொடங்க அரசு முடிவு செய்துள்ளது.

பெங்களூரு: மேகதாது திட்டத்தை அமல்படுத்த வசதியாக 5 கிராமங்களை சேர்ந்த மக்களை வெளியேற்ற கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் அனுமதி கிடைத்ததும் பணிகளை விரைவாக தொடங்க அரசு முடிவு செய்துள்ளது.

66 டி.எம்.சி. கொள்ளளவு

கர்நாடகத்தில் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்தது. இந்த திட்டத்தின் இன்றைய மதிப்பு ரூ.9 ஆயிரம் கோடி ஆகும். சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.

கர்நாடக காங்கிரஸ் கட்சி சமீபத்தில் பாதயாத்திரை நடத்தியதால் அதுபற்றி மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. தலைநகர் பெங்களூருவில் இருந்து சுமார் 90 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த மேகதாது பகுதி அமைந்துள்ளது. அங்கு 66 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) கொள்ளளவு கொண்ட அணை கட்டப்படுகிறது. அதில் இருந்து நீர் எடுத்து வரப்பட்டு பெங்களூரு, கோலார், சிக்பள்ளாப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

மறுவாழ்வு வசதிகள்

மேலும் நீர்மின் நிலையம் மூலம் 400 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது. அங்கு அணையை கட்டினால் 5,252 எக்டேர் நிலப்பரப்பு நீரில் மூழ்கும். இதில் 201 எக்டேர் நிலம் வருவாய்த்துறைக்கு சேர்ந்தது ஆகும். இதில் காவிரி ஆற்றை ஒட்டியுள்ள ராமநகர் மாவட்டம் காடஞ்சின மடிவாளா, கொங்கெதொட்டி, சங்கமம், முத்தத்தி பொம்மசந்திரா ஆகிய 5 கிராமங்கள் நீரில் மூழ்க உள்ளன. 

இதனால் அங்கு வசிக்கும் சுமார் 200 குடும்பங்கள் பாதிக்கப்படும். அவர்களுக்கு வேறு இடத்தில் மறுவாழ்வு வசதிகளை செய்து கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதில் தனியார் நிலத்தின் தேவை மிக குறைவாக உள்ளது. அதனால் அந்த நிலத்தை கையகப்படுத்த ரூ.350 கோடி மட்டுமே தேவை.
வருகிற 2050-ம் ஆண்டுக்குள் பெங்களூரு நகரின் மக்கள்தொகை 2 கோடியை தாண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். 

பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் நீரின் தேவைக்கு காவிரி ஆற்றை மட்டுமே நம்பி உள்ளன. வேறு நீர் ஆதாரம் இல்லை. அதனால் மேகதாது திட்டத்தை எப்படியாவது செயல்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

குடிநீர் நோக்கம்

புதிய அணை கட்டுவதால், மழை அதிகமாக பெய்யும் காலத்தில் அந்த நீரை சேகரித்து வைத்து கொள்ள முடியும். வறட்சி காலத்தில் தமிழகத்திற்கு அந்த அணையில் இருந்து நீர் திறந்துவிட முடியும். இதன் மூலம் கபினி, கே.ஆர்.எஸ்., ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளில் இருக்கும் நீரை உள்ளூர் விவசாயத்திற்கு முழுமையாக பயன்படுத்தி கொள்ள முடியும் என்று அரசு கருதுகிறது. இதனால் விவசாயிகளுக்கு கூடுதலாக நீர் வழங்க முடியும்.

மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி, காவிரி நிர்வாக ஆணையத்தின் அனுமதி கிடைக்க வேண்டும். இது குடிநீர் நோக்கத்தை கொண்ட திட்டம் என்பதால் இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசு கேட்கிறது. மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் பணிகளை விரைவாக மேற்கொள்ள மாநில அரசு திட்டமிட்டுள்ளது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்தில் காவிரி டெல்டா பாலைவனமாகிவிடும் என்று தமிழக அரசு கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story