விதிகள் மீறப்படுவதாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் போராட்டம்


விதிகள் மீறப்படுவதாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் போராட்டம்
x
தினத்தந்தி 27 Jan 2022 9:18 PM GMT (Updated: 27 Jan 2022 9:18 PM GMT)

நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் கலந்தாய்வில் அரசு விதிகள் மீறப்படுவதாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.

மதுரை, 

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடந்து வருகிறது. மதுரை மாவட்ட அரசு, நகராட்சி பள்ளிகளுக்கான கலந்தாய்வு ஓ.சி.பி.எம். பள்ளியில் நடக்கிறது. இதற்கிடையே, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் அரசு விதிகள் மீறப்பட்டதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கலந்தாய்வு வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து, நிர்வாகிகள் தரப்பில் கூறியதாவது:-
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2019-ம் ஆண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் 29.1.2019-க்கு பின்னர் பணியில் சேராத போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு மட்டும் தனியாக பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதனை பின்பற்றியே அரசாணை எண் 113-ன் படி, தமிழகம் முழுவதும் கலந்தாய்வு நடந்து வருகிறது. இதில், மதுரை கள்ளிக்குடி ஒன்றியத்தில் மட்டும் போராட்டத்தில் ஒரு நாள் கூட பங்கேற்காத தலைமை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் உள்ளிட்டோருக்கு விதிகளை மீறி கலந்தாய்வு நடத்தப்பட்டு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து, கலந்தாய்வு நடத்தி வரும் மாவட்ட கல்வி அலுவலரிடம் ஜாக்டோ ஜியோ தரப்பில் முறையிடப்பட்டது. ஆனால், அரசு விதிகளை மீறி கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதனை கண்டித்து, கொரோனா விதிகளை பின்பற்றி நிர்வாகிகள் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
----------

Next Story