முன்னாள் நீதிபதி மனைவிக்கு ரூ.42 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்; தையல் கடைக்கு, நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு


முன்னாள் நீதிபதி மனைவிக்கு ரூ.42 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்; தையல் கடைக்கு, நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 27 Jan 2022 9:44 PM GMT (Updated: 27 Jan 2022 9:44 PM GMT)

பட்டு சேலை சேதம் அடைந்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதியின் மனைவிக்கு ரூ.42 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தையல் கடைக்கு, நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

பெங்களூரு: பட்டு சேலை சேதம் அடைந்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதியின் மனைவிக்கு ரூ.42 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தையல் கடைக்கு, நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

பட்டு சேலை சேதம்

பெங்களூருவில் மாவட்ட மற்றும் செசன்சு கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் எம்.எஸ்.இவானி. இவரது மனைவி மங்களா. இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு இவானியும், அவரது மனைவியும் ஒரு துணிக்கடைக்கு சென்று ரூ.31 ஆயிரத்து 975-க்கு மைசூரு பட்டு சேலை வாங்கி இருந்தனர். பின்னர் சேலையில் பார்டர் தைக்க ஒரு தையல் கடையில் மங்களா கொடுத்து இருந்தார்.

இந்த நிலையில் 2 நாட்கள் கழித்து அந்த பட்டு சேலைக்கு பார்டர் தைக்க தையல் கடை ஊழியர்கள் எடுத்தனர். அப்போது பட்டு சேலையில் தீப்பிடித்து சேதமடைந்தது போல் இருந்தது. இதுகுறித்து மங்களாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த தையல் கடைக்கு சென்ற மங்களா, கடைக்காரரிடம் பட்டு சேலையை சேதப்படுத்திவிட்டதாக கூறி அதிருப்தியை தெரிவித்துவிட்டு, அந்த சேலையை வாங்கிக் கொண்டு சென்றார். 

ரூ.41,975 இழப்பீடு

பின்னர் பட்டு சேலையை சேதப்படுத்தியதற்காக தையல் கடை தனக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறி பெங்களூருவில் உள்ள நுகர்வோர் கோர்ட்டில் மங்களா வழக்கு தொடர்ந்தார். மேலும் அந்த பட்டு சேலை வாங்கிய ரசீதை அவர் சமர்ப்பித்து இருந்தார். இந்த வழக்கு நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி சீனிவாஸ் முன்னிலையில் நடந்து வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நடந்தது. அப்போது ஆஜரான தையல் கடை உரிமையாளர் திவ்யா, மங்களா பட்டு சேலையை கொடுத்த போது கடையில் கூட்டமாக இருந்ததால் சேலையை பிரித்து பார்க்காமல் வாங்கி வைத்ததாக கூறினார். தங்களால் சேலைக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் கூறினர். 

ஆனால் இதனை ஏற்க மறுத்த நுகர்வோர் கோர்ட்டு, உங்கள் கடைக்கு வரும் சேலைகளை பிரித்து சரிபார்க்க வேண்டியது உங்களது கடமை என்று கூறியதுடன் சேலை விலை ரூ.31 ஆயிரத்து 975 உடன் சேலையை சேதப்படுத்தியதற்காக ரூ.5 ஆயிரம், வழக்கு செலவாக ரூ.5 ஆயிரம் என ரூ.41 ஆயிரத்து 975-ஐ மங்களாவுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

Next Story