குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி


குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 28 Jan 2022 2:10 PM GMT (Updated: 28 Jan 2022 2:10 PM GMT)

பூதாளக்குன்னு-பெருங்கரை இடையே குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பந்தலூர்

பூதாளக்குன்னு-பெருங்கரை இடையே குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இணைப்பு சாலை

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட உப்பட்டி துணை மின்நிலையம் அருகில் இருந்து பூதாளக்குன்னு, பெருங்கரை வழியாக நெல்லியாளம் அரசு தேயிலை தோட்டம் பகுதிக்கு இணைப்பு சாலை செல்கிறது. இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ரேஷன் கடை, ஆஸ்பத்திரி உள்பட அத்தியாவசிய தேவைக்கு கூட உப்பட்டி, பந்தலூருக்கு செல்ல வேண்டி உள்ளது. 

இதற்காக அங்குள்ள இணைப்பு சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அவசர தேவைக்கு கூட அந்த சாலையில் விரைவாக செல்ல முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். 

கால் தவறி காயம்

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் உள்ள இணைப்பு சாலை மிகவும் மோசமாக நிலையில் இருக்கிறது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பழுதடைந்து நடுவழியில் நின்று விடுகின்றன. 

வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதால் ஆபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இது மட்டுமின்றி மாணவ-மாணவிகள் உள்பட பாதசாரிகள் நடந்து செல்லும்போது, சாலையில் உள்ள பள்ளங்களால் கால் தவறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மழைக்காலத்தில் அந்த சாலையை பயன்படுத்தவே முடியாத நிலை காணப்படுகிறது. எனவே சாலையை உடனடியாக சீரமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story