கூடலூர் அருகே பொதுப்பணித்துறை அதிகாரியை வழிமறித்து விவசாயிகள் போராட்டம்

லோயர்கேம்ப் முல்லைப்பெரியாற்றில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுப்பணித்துறை அதிகாரியை வழிமறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
கூடலூர்:
லோயர்கேம்ப் முல்லைப்பெரியாற்றில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுப்பணித்துறை அதிகாரியை வழிமறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
புதிய குடிநீர் திட்டம்
கூடலூர் அருகே லோயர்கேம்ப் முல்லைப்பெரியாற்றில் இருந்து மதுரை நகருக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக ரூ.1,295 கோடியில் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, லோயர்கேம்பில் முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டி குழாய் மூலம் குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆண்டிப்பட்டி வழியாக மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு தண்ணீரை குழாய் வழியாக கொண்டு சென்றால், தேனி மாவட்ட மக்களுக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில் பிரச்சினை ஏற்படும் என்றும், எனவே இந்த புதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இருப்பினும் அதிகாரிகள் ரகசியமாக புதிய குடிநீர் திட்டத்திற்கான பணிகளை செய்து வருகின்றனர்.
வழிமறித்து போராட்டம்
இந்தநிலையில் உத்தமபாளையம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கதிரேஷ்குமார் தலைமையிலான பொதுப்பணித்துறை அலுவலர்கள், ஊழியர்கள் நேற்று லோயர்கேம்ப், தம்மணம்பட்டி, வண்ணான்துறை ஆகிய பகுதிகளில் தடுப்பணைக்கான அடித்தளம் அமைக்க மண்பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து 8 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி மண்ணின் தன்மையை சோதனை செய்தனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் உத்தமபாளையத்திற்கு வாகனங்களில் புறப்பட்டனர்.
அப்போது அதிகாரிகள் ரகசியமாக மண் பரிசோதனை செய்துவிட்டு திரும்புவது குறித்து அறிந்த கூடலூர் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன், பாரதீய கிஷான் சங்க தேனி மாவட்ட தலைவர் சதீஷ்பாபு, துணைத்தலைவர் கொடியரசன், முல்லைச்சாரல் விவசாய சங்க செயலாளர் ஜெகன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் கூடலூர் நகர செயலாளர் ராஜீவ், கம்பம் ஒன்றிய செயலாளர் மகேஷ் மற்றும் விவசாயிகள் தம்மணம்பட்டி அருகே திரண்டனர். இதற்கிடையே அந்த வழியாக வந்த பொதுப்பணித்துறை அதிகாரி கதிரேஷ்குமார் மற்றும் அலுவலர்களை விவசாயிகள் வழிமறித்தனர். மேலும் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் புதிய திட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் கூறுகையில், புதிய குடிநீர் திட்டப்பணிகள் தொடர்பாக அதிகாரிகள் வந்தால் விவசாயிகள் மற்றும் போலீசாரிடம் தகவல் தெரிவித்துவிட்டுதான் வரவேண்டும். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்காமல் வந்ததால் தான் வழி மறித்தோம் என்றனர்.
இதையடுத்து போலீசார் கூறுகையில், இனிமேல் அதிகாரிகள் பணிசெய்ய வரும்போது போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை பணிகள் செய்யக்கூடாது என்றும் அதிகாரிகளிடம் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாகனத்துடன் அங்கிருந்து சென்றனர்.
Related Tags :
Next Story