திருப்பூரில் கிறிஸ்தவ சபைகளுக்கான கல்லறை தோட்டத்திற்கு இடம்


திருப்பூரில் கிறிஸ்தவ சபைகளுக்கான கல்லறை தோட்டத்திற்கு இடம்
x
தினத்தந்தி 28 Jan 2022 4:48 PM GMT (Updated: 28 Jan 2022 4:48 PM GMT)

திருப்பூரில் கிறிஸ்தவ சபைகளுக்கான கல்லறை தோட்டத்திற்கு இடம்

அனுப்பர்பாளையம்:
திருப்பூரில் கிறிஸ்தவ சபைகளுக்கான கல்லறை தோட்டத்திற்கு இடம் ஒதுக்கி தந்த தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சருக்கும் நன்றி தெரிவித்து அனைத்து திருச்சபைகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கல்லைறை தோட்டம்
திருப்பூரில் உள்ள அனைத்து கிறிஸ்தவ சபைகளுக்கு விரிவான இடவசதியுடன் கூடிய கல்லறை தோட்டம் வேண்டும் என்பது கிறிஸ்தவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இதுதொடர்பாக அனைத்து திருச்சபைகள் சார்பில் திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ. மூலமாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்ற தமிழக அரசு திருப்பூரில் உள்ள அனைத்து திருச்சபைகளுக்கான கல்லறைக்காக வஞ்சிபாளையத்தில் இடம் ஒதுக்கியது.
 இந்த நிலையில் திருப்பூர் அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகளின் கல்லறை தோட்ட கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் அவினாசி ரோடு ஆஷர்நகரில் உள்ள சி.எஸ்.ஐ. தூய லூக்கா ஆலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் க.ராஜ்மோகன்குமார் தலைமை தாங்கினார். உபதலைவர் அண்ணாதுரை, செயலாளர் அருண் அந்தோணி என்கிற அமல்ராஜ், பொருளாளர் ஆபிரகாம் பிரான்சிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் ஜெயராஜ் வரவேற்றார். ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் எட்வின் ராஜ்குமார், அசோக்குமார், விக்டர், ஜஸ்டின், ஒருங்கிணைப்பாளர்கள் ஏனோக் ரங்கநாதன், விஜய் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். 
முதல்-அமைச்சருக்கு நன்றி
கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட ரோமன் கத்தோலிக்க திருச்சபை, லூத்தரன் திருச்சபை, தென்னிந்திய திருச்சபை, பெந்தெகோஸ்தே திருச்சபைகள் என அனைத்து திருச்சபை மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்த தமிழக அரசுக்கும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ. வுக்கும், கிறிஸ்தவ மக்களின் பிரதிநிதியாக செயல்பட்டு வரும் தி.மு.க. மத்திய மாவட்ட முன்னாள் வர்த்தக அணி அமைப்பாளர் ராஜ்மோகன்குமாருக்கும் நன்றி தெரிவிப்பது. கல்லறை தோட்டத்தை முறையாக பராமரித்து, அனைத்து ஏழை, எளிய கிறிஸ்தவ மக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்வது. வரும் காலங்களில் கிறிஸ்தவ ஏழை மக்களுக்கு இலவச ஆம்புலன்சு சேவை செய்வது, கல்லறை தோட்டத்தை சுத்தம் செய்து, சுற்றுச்சுவர் மற்றும் போர்வெல் அமைத்து தர அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகள் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 
முடிவில் துணை செயலாளர் வேதமுத்து நன்றி கூறினார். நிறைவு ஜெபத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.

Next Story