கூட்டணி கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை


கூட்டணி கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 28 Jan 2022 4:50 PM GMT (Updated: 28 Jan 2022 4:50 PM GMT)

கோவை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வார்டு பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

கோவை

கோவை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வார்டு பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

வார்டு பங்கீடு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால் கூட்டணி கட்சிகளுடன் வார்டு பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. கோவை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 7 நகராட்சி, 33 பேரூராட்சிகள் உள்ளன. 

இதில் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு வார்டுகளை ஒதுக்குவது குறித்து பேச்சுவார்த்தை கோவை காளப்பட்டி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டணி கட்சி நிர்வாகிகள்

இதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி, சி.ஆர்.ராமச்சந்திரன், டாக்டர் வரதராஜன், காங்கிரஸ் சார்பில் வி.எம்.சி.மனோகரன், கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் பி.ஆர்.நடராஜன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம், ராமமூர்த்தி மற்றும் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கொ.ம.தே.க., மனிதநேய மக்கள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பட்டியல்

அப்போது, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் வாரியாக தங்க ளுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள வார்டுகள் எது? எத்தனை வார்டுகள்?. எந்தெந்த வார்டுகள் தங்களுக்கு வேண்டும் என்பது குறித்த பட்டியலை கூட்டணி கட்சி நிர்வாகிகள், தி.மு.க. நிர்வாகிகளிடம் வழங்கினர்.

கூட்டணி கட்சியினர் கொடுத்த பட்டியலை பரிசீலித்து எந்த கட்சிக்கு எத்தனை வார்டுகள் வழங்குவது என்று முடிவு செய்ய உள்ளதாகவும், வார்டு பங்கீடு சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை இறுதி செய்யப்படும் என்று தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story