பறவைகள் கணக்கெடுப்பு பணி


பறவைகள் கணக்கெடுப்பு பணி
x
தினத்தந்தி 28 Jan 2022 5:18 PM GMT (Updated: 28 Jan 2022 5:18 PM GMT)

காரங்காடு கிராமத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது.

தொண்டி, 
தொண்டி அருகே உள்ள காரங்காடு கிராமத்தில் இயற்கை தந்த அருட்கொடையாக சதுப்பு நில பகுதியில் அலையாத்தி காடுகள் அமைந்துள்ளது. காரங்காடு கடற்கரை களிமண் பாங்கானது. இங்கு கோட்டைக்கரை ஆறு மூன்றாகப் பிரிந்து கடலில் கலக்கும் கழிமுகப்பகுதியில் இயற்கையான சதுப்பு நிலக் காடுகள் 5கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ளன. உப்பங்கழியின் இருபுறமும் அழகாக வளர்ந்துள்ள இக் காடுகள் கண்ணுக்கு விருந்தாகிறது. ஆழம் குறைவான இப்பகுதி அரியவகைப் பறவைகள், கடல் விலங்குகள், தாவரங்களின் இருப்பிடமாக விளங்குகிறது. 
இந்த பகுதியில் கடல் பசு, கடல் குதிரை, கடல்பாசி உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் நிறைந்த பகுதியாக விளங்குகிறது. சூழல் சுற்றுலா தளத்திற்கு ஆண்டுதோறும் பல் வேறு நாடுகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு வந்து முட்டையிட்டு குஞ்சு பொறித்து செல்கின்றன. மேலும் எப்போதும் இங்கு ஆயிரக்கணக்கான பறவைகளை காண முடிகிறது. இந்த இடம் பறவைகளின் சரணாலயமாக திகழ்ந்து வருகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் வனத்துறை மூலம் பறவைகள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் காரங்காடு கிராமத்தில் மாங்குரோவ் காடுகள் மற்றும் கடலோர பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது. பறவைகள் கணக்கெடுப்பு தொடர்பாக பணியில் ஈடுபடும் நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வனஉயிரின காப்பாளர் பகான் ஜக்தீஷ் சுதாகர், உதவி வனப்பாதுகாவலர் கணேசலிங்கம், ராமநாதபுரம் வனஉயிரின வனச்சரக அலுவலர் ஜெபஸ் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.காரங்காடு சூழல் சுற்றுலா மையத்தில் நடைபெறும் கணக்கெடுப்பு பணியில் ராமநாதபுரம் வனஉயிரின வனச்சரக அலுவலர் ஜெபஸ் தலைமையில் பறவைகள் ஆராய்ச்சியாளர் மது மகேஷ், மனோஜ் பிரபாகர், ஐசக், அரவிந்தன், சதன்ராஜ் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story