மாணவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை


மாணவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 28 Jan 2022 5:34 PM GMT (Updated: 28 Jan 2022 5:34 PM GMT)

மாணவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம், 
தமிழகத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் வரும் 1-ந் தேதி முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளை திறக்க கல்வித்துறையும், சுகாதாரத்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக பள்ளிகளை சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளித்து சுகாதாரமிக்க பகுதியாக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகளை சமூக இடைவெளியுடன் அமர வைக்கும் வகையில் தேவையான இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
இதுகுறித்து ராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் குமரகுருபரன் கூறியதாவது:- அரசின் உத்தரவின்படி மாவட்டத்தில் பள்ளிகள் வரும் 1-ந் தேதி முதல் திறக்கப்பட உள்ளது. பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் அனைவரையும் முககவசம் அணிந்து வருவதை நுழைவு வாயில் பகுதியிலேயே உறுதிபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர, மாணவ-மாணவிகளை வெப்பமானி கொண்டு உடல்வெப்ப நிலையை பரிசோதித்து கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே வகுப்பறைக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை நடத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையின் சார்பில் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு சென்று யாருக்கேனும் காய்ச்சல் அறிகுறி உள்ளதா என்று கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும்,  தொற்று இருந்தால் அந்த வகுப்பறையில் பரிசோதனை செய்யவும் தயாராக உள்ளோம். தொற்று பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். எனவே, யாரும் அச்சப்பட தேவையில்லை. 
இவ்வாறு கூறினார்.

Next Story