கால்வாயில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கப்பட்டதால் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு


கால்வாயில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கப்பட்டதால் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 28 Jan 2022 5:46 PM GMT (Updated: 28 Jan 2022 5:46 PM GMT)

கால்வாயில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கப்பட்டதால் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் நீர்ப்பிடிப்பு பகுதியில் வீடுகளை சூழ்ந்த தண்ணீர் வடிய தொடங்கியது.

குலசேகரம், 
கால்வாயில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கப்பட்டதால் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் நீர்ப்பிடிப்பு பகுதியில் வீடுகளை சூழ்ந்த தண்ணீர் வடிய தொடங்கியது.
கால்வாயில் உடைப்பு
குமரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் பெய்த தொடர் மழை காரணமாக 13-ந் தேதி பேச்சிப்பாறை அணையின் பிரதான கால்வாயான கோதையாறு இடது கரை கால்வாயில் புத்தன் அணை அருகே குற்றியாணி பகுதியில் உடைப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில் டிசம்பர் மாதம் 13-ந் தேதி பாசன பகுதிகளுக்கு பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்ட போது கால்வாய் உடைப்பு காரணமாக அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பெருஞ்சாணி அணை திறக்கப்பட்டு அங்கிருந்து கூடுதல் தண்ணீர் பாசன பகுதிகளில் வினியோகம் செய்யப்பட்டது.
அணை நீர்மட்டம் உயர்வு
பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாததால் அதன் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது.  
எனவே அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான காயக்கரை, உரைப்பாறை உள்ளிட்ட இடங்களில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழந்தது. மேலும் வளையந்தூக்கி, தோட்டமலை, மாறாமலை உள்ளிட்ட பழங்குடி குடியிருப்புகளுக்குச் செல்லும் சாலையும் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அங்குள்ள பழங்குடியின மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
பின்னர் பேச்சிப்பாறை அணையில் இருந்து சிற்றாறு பட்டணம் கால்வாய் வழியாக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. எனினும் அணையின் நீர்மட்டம் குறையவில்லை.
உடைப்பு சீரமைக்கப்பட்டது
இதற்கிடையே பேச்சிப்பாறை கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. 45 நாட்களுக்கு பிறகு கால்வாய் உடைப்பு சீரமைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் இரவு பேச்சிப்பாறை அணையில் இருந்து அதன் பாசன பகுதிகளுக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் வினாடிக்கு 428 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று இந்த அளவு வினாடிக்கு 627 கன அடியாக உயர்த்தப்பட்டது. இதில் 200 கன அடி தண்ணீர் சிற்றாறு பட்டணம் கால்வாயிலும், 427 கன அடி தண்ணீர் புத்தன் அணையிலும் கலந்து, பெருஞ்சாணி அணை தண்ணீருடன் பாசன பகுதிகளுக்கு செல்கிறது.
தண்ணீர் வடியும்
இதுகுறித்து பொதுப்பணித்துறை நீராதாரப்பிரிவு பொறியாளர் ஒருவர் கூறுகையில், பேச்சிப்பாறை அணையின் கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில் பாசன பகுதிகளில் தண்ணீர் தேவையை கருதி தற்போது அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் தண்ணீர் படிப்படியாக வடியும். மேலும் சாலைகளை மூழ்கடித்து நிற்கும் தண்ணீரும் வருகிற 10 நாட்களுக்குள் முழுமையாக வடியும் என்றார்.

Next Story