‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 28 Jan 2022 6:57 PM GMT (Updated: 28 Jan 2022 6:57 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகார் பெட்டிக்கு நன்றி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா நாகுடி வெட்டனூர் சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் சாலையின் நடுவே செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக சென்றன. இதனால் நெற்கதிர்கள் அறுக்கும் எந்திரம் அந்த வழியாக செல்லும்போது மின்கம்பியில் உரசும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாழ்வாக சென்ற மின்கம்பிகளை சீரமைத்தனர். எனவே செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
பொதுமக்கள், புதுக்கோட்டை.
எலும்புக்கூடான மின்மாற்றி
பெரம்பலூர்-துறையூர் சாலையில் கல்யாண நகரில் உள்ள ஒரு திருமண மண்டபம் எதிரே 2 மின்மாற்றிகள் உள்ளன. அந்த மின்மாற்றிகளை தாங்கி நிற்கும் கம்பங்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எலும்புக்கூடு போல் காட்சியளிக்கிறது. இதனால் எப்பொழுது வேண்டுமானாலும் அந்த மின்மாற்றிகள் கீழே விழ வாய்ப்புள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கு முன் புதிய கம்பங்களை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
வசந்தி, பெரம்பலூர்.
திருச்சி மாவட்டம் தென்னூர் அண்ணா நகர் 4-வது குறுக்கு தெருவில் உள்ள மின்மாற்றி சாய்ந்த நிலையில் உள்ளது. மேலும், அதன் கம்பங்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு உள்ளது. எனவே பலத்த காற்று வீசினால் அந்த மின்கம்பம் சரிந்து விழும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த மின்கம்பங்களை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ருக்மணி, திருச்சி.
சுகாதார சீர்கேடு
பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமம் 3-வது வார்டு பகுதியில் சாக்கடை கால்வாயில் குப்பைகள் அடைத்து உள்ளதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுவதுடன், கொசுத்தொல்லையும் அதிகரித்து வருகிறது. மேலும், இப்பகுதியில் சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயில் உள்ள குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லலிதா, பெரம்பலூர்.
வேகத்தடை அமைக்கப்படுமா?
கரூர்-திண்டுக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஆலமரத்துப்பட்டி பிரிவு சாலையில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதில், ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மேலும், இப்பகுதியில் இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் வேகத்தடை அமைப்பதுடன், அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
பாலமுருகன், கரூர்.
பழுதடைந்த பள்ளி கட்டிடம் இடிக்கப்படுமா?
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா ஒகளூர் வ.உ.சி. நகரில் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சொந்தமான 2 பழைய கட்டிடங்கள் உள்ளன. கடந்த 5 நாட்களுக்கு முன்பு அந்த கட்டிடத்தின் ஒருபக்க சுவர் திடீரென சரிந்து விழுந்தது. அப்போது மாணவர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பழுதடைந்த கட்டிங்களை உடனடியாக இடித்து விட்டு புதிய கட்டிடங்களை கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவி, பெரம்பலூர்.
அதிகபாரம் ஏற்றி செல்லும் வாகன ஓட்டிகள்
பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் போக்குவரத்து மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் டிராக்டரில் அதிகபாரம் ஏற்றிக்கொண்டு செல்லும் வாகன ஓட்டிகளால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பெரம்பலூர்.

Next Story