சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாள் அனுமதி


சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாள் அனுமதி
x
தினத்தந்தி 28 Jan 2022 7:35 PM GMT (Updated: 28 Jan 2022 7:35 PM GMT)

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாள் அனுமதி அளிக்கப்படுகிறது.

வத்திராயிருப்பு, 
சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாள் அனுமதி அளிக்கப்படுகிறது. 
பக்தர்களுக்கு அனுமதி 
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 
இந்தநிலையில் தை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 1-ந் தேதி வரை  4 நாட்களுக்கு தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு அபிஷேகம் 
பிரதோஷத்தையொட்டி மாலை 4.30 மணியில் இருந்து மாலை 6 மணிக்குள் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. 
வருகிற 31-ந் தேதி தை மாதம் அமாவாசை என்பதால் சுந்தரமகாலிங்கசுவாமிக்கு பால், பழம் பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான ெபாருட்களால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தை அமாவாசை என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலைக்கு செல்ல மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதால் காய்ச்சல், சளி, இருமல் உள்ள பக்தர்களுக்கும், 10 வயதுக்குட்பட்ட, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கோவிலுக்கு வர அனுமதியில்லை. 
தங்க அனுமதி இல்லை 
அதேபோல இரவு நேரத்தில் கோவிலில் தங்க அனுமதி இல்லை. நீர் ஓடையில் குளிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அனுமதி வழங்கப்பட்டுள்ள நாட்களில் மழை பெய்தால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் எனவும் கோவில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். பிரதோஷத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 
சேவை கட்டணம் உயர்வு 
சதுரகிரியில் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்வதற்காக தாணிப்பாறை அடிவாரம் பகுதியில் உள்ள நுழைவுவாயிலில் பக்தர்களுக்கு சேவை கட்டணமாக வனத்துறை சார்பில் ரூ. 5 வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேவை கட்டணம் ரூ.10 ஆக உயர்த்தப்படுகிறது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Next Story