தேக்கு, தென்னை மரங்களை சேதப்படுத்தி யானைகள் அட்டகாசம்


தேக்கு, தென்னை மரங்களை சேதப்படுத்தி யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 28 Jan 2022 7:53 PM GMT (Updated: 28 Jan 2022 7:53 PM GMT)

சேத்தூர் பகுதியில் தேக்கு, தென்னை மரங்களை யானைகள் தாக்கி சேதப்படுத்தி வருகிறது.

தளவாய்புரம், 
சேத்தூர் பகுதியில் தேக்கு, தென்னை மரங்களை யானைகள் தாக்கி சேதப்படுத்தி வருகிறது. 
யானைகள் தாக்குதல் 
சேத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயி லட்சுமணசாமி (வயது 65) என்பவருக்கு சொந்தமான தோப்பு ஒத்தப்பனை காடு பகுதியில் உள்ளது. இது மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியை ஒட்டி உள்ளது.
இங்கு இவருக்கு ஏராளமான தென்னை, தேக்கு, மா மரங்கள் உள்ளது. இந்தநிலையில் இவரது தோப்பில் இரவில் புகுந்த யானைகள் 15 தென்னை மரக் கன்றுகளையும், 4 தேக்கு மரங்களையும், 3 தென்னை மரங்களையும் ஒடித்து சேதப்படுத்தி சென்றுவிட்டது. இதுபற்றி விவசாயி லட்சுமணசாமி கூறியதாவது:- 
 எனது தோப்பில் இரவு புகுந்த யானைகள் தென்னை, தேக்கு உள்ளிட்ட மரங்களை தாக்கி சேதப்படுத்தி உள்ளது.  இதுபற்றி சேத்தூர் வனத்துறையிடம் தகவல் தெரிவித்தோம். இதனையடுத்து இரவில் நாங்களும், வனத்துறையினர் உடன் தோப்பில் தங்கி உள்ளோம். யானைகள் வரும் சத்தம் கேட்டால் வெடிகளை வெடிக்க செய்கிறோம். 
பெரும் நஷ்டம் 
இதனால் யானைகள் தோப்பில் உள்ளே வராமல் திரும்பி சென்று விடுகிறது. ஆகவே இதனை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு யானைகள் சேதப்படுத்திய மரங்களுக்கு இழப்பீடு தொகை தரவேண்டும்.
 சேத்தூர் வனத்துறையினர் வனப்பகுதியில் பெரிய அளவில் பள்ளம் தோண்டி இந்த தோப்பு பகுதியில் யானை புகாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் கடன் வாங்கி நட்ட மரங்கள் அனைத்தையும் யானைகள் தாக்கி சேதப்படுத்துவதால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story