நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் பீதி


நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 28 Jan 2022 8:19 PM GMT (Updated: 2022-01-29T01:49:36+05:30)

வாழப்பாடி அருகே நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் பீதி அடைந்தனர். வீடுகளை விட்டு வெளிேய ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வாழப்பாடி:-
வாழப்பாடி அருகே நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் பீதி அடைந்தனர். வீடுகளை விட்டு வெளிேய ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நில அதிர்வு
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே நீர்முள்ளிகுட்டை பகுதியில் நேற்று காலை 11.30 மணி அளவில் வீட்டில் உள்ள பொருட்கள் ஆங்காங்கே சிதறி விழுந்தன. தரையில் சில இடங்களில் அதிர்வு ஏற்பட்டதை மக்கள் உணர்ந்தனர். இதனால் அந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமானவர்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியே தெருவுக்கு ஓடி வந்தனர்.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் மக்கள் ஆங்காங்கே சிதறி ஓடிய காட்சிகள் பதிவாகி இருந்ததாக தெரிகிறது. மேலும் நாய்கள் சிதறி ஓடிய காட்சிகளும் அந்த கேமராவில் பதிவாகி இருந்தன. நீர்முள்ளிகுட்டை, பள்ளதாதனூர், சின்னமநாயக்கன்பாளையம், கோலத்துக்கோம்பை உள்ளிட்ட சுமார் 10 கிலோமீட்டர் பகுதியில் உள்ள கிராம மக்கள் நிலஅதிர்வை உணர்ந்துள்ளனர். 
பீதி அடைய வேண்டாம்
இதுகுறித்து வாழப்பாடி தாசில்தார் வரதராஜனிடம் கேட்டதற்கு, ஓரிரு கிராமங்களில் வெடிச்சத்தம் கேட்டதோடு, லேசான நில அதிர்வை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்தனர். சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வழியாக டெல்லியில் உள்ள நில அதிர்வு பதிவகத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டதற்கு, நில அதிர்வு ஏற்பட்டதாக பதிவுகள் ஏதும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் வானில் அடுத்தடுத்து 3 ராணுவ ஜெட் விமானங்கள் சென்றதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட சத்தத்தை கூட மக்கள் தவறாக புரிந்திருக்கலாம். நில அதிர்வு ஏற்படவில்லையென தெரியவந்துள்ளதால் மக்கள் பீதியடைய வேண்டாம். இதுகுறித்த வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்றார்.

Related Tags :
Next Story