மதுரை அரசுப்பள்ளி மாணவர்கள் 17 பேர் மருத்துவ படிப்புக்கு தேர்வு


மதுரை அரசுப்பள்ளி மாணவர்கள் 17 பேர் மருத்துவ படிப்புக்கு தேர்வு
x
தினத்தந்தி 28 Jan 2022 8:34 PM GMT (Updated: 28 Jan 2022 8:34 PM GMT)

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான எம்.பி.பி.எஸ். சேர்க்கையில் மதுரை மாவட்ட மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

மதுரை,

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான எம்.பி.பி.எஸ். சேர்க்கையில் மதுரை மாவட்ட மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

எம்.பி.பி.எஸ். 

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கனவு படிப்பான எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, அரசுப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ மாணவ சேர்க்கையில் தமிழக அரசு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது.
இதற்கிடையே அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கால் கடந்த 2 வருடங்களாக நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. மதுரை மாவட்டத்தில் முதன்முறையாக ஆன்லைன் மூலம், வாட்ஸ் ஆப் குழு தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது.

மதுரை மாவட்டம்

மேலும், தமிழகத்திலேயே மதுரை மாவட்டத்தில் மட்டும் இந்த வருடம், முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன் ஆலோசனையின் பேரில், மாதிரி தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையில் மதுரை மாவட்டம் 2-வது இடம் பிடித்தது. அதாவது, நீட் தகுதித்தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் 100 பேரும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் 82 பேரும் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்களில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டு பிரிவில் 73 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. மதுரை மாவட்ட நீட் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் குழுவை சேர்ந்த ஆசிரியை வெண்ணிலா தலைமையில் இந்த மாணவர்கள் நேற்று கலந்தாய்வில் கலந்து கொண்டனர். இதில் 16 பேருக்கு நேற்று சேர்க்கைக்கான அனுமதி கிடைத்தது. இவர்களில் 9 மாணவ, மாணவிகள் அரசு மருத்துவக்கல்லுரிகளில் சேர்க்கை பெற்றனர். 6 மாணவ, மாணவிகள் பல் மருத்துவ சேர்க்கை பெற்றனர். 2 பேருக்கு மட்டும் அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவ கல்லுரியில் எம்.பி.பி.எஸ். சேர்க்கை கிடைத்தது. இவர்களில், 15 பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநகராட்சி பள்ளி மாணவிகள்

இதில், அரசு மதுரை சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி மாணவி கோகிலவாணி, மாநகராட்சி அவ்வை மேல்நிலைப்பள்ளி மாணவி பிரியங்கா, எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஹரீஷ்குமார் மற்றும் மாநகராட்சி ஈ.வெ.ரா. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ராதிகா ஆகியோர் மதுரை மருத்துவ கல்லூரியை தேர்ந்தெடுத்தனர். ஈ.வெ.ரா. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆஷிகா ராணி சென்னை மருத்துவ கல்லூரியை தேர்ந்தெடுத்தார். மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி இலக்கியா, அவ்வை மாநகராட்சி பள்ளி மாணவி தீபிகா ஸ்ரீ ஆகியோர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியை தேர்ந்தெடுத்தனர். ஈ.வெ.ரா. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நான்சி நெல்லை அரசு மருத்துவ கல்லூரியையும் தேர்ந்தெடுத்தனர். அவ்வை மாநகராட்சி பள்ளி மாணவி வினோதினி விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியை தேர்ந்தெடுத்தார். அவ்வை மாநகராட்சி பள்ளி மாணவி சங்கீதா மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரியையும், சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சங்கீதா கோவை கே.எம்.சி.எச். மருத்துவ கல்லூரியையும் தேர்ந்தெடுத்தனர். விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவி தங்கப்பேச்சி கன்னியாகுமரி ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவகல்லூரியையும், மேலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி யாழினி சென்னை மாதா மருத்துவக்கல்லூரியையும், பேரையூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி புவனேசுவரி திருவள்ளூர் மருத்துவக்கல்லூரியையும், பூசலப்புரம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவர் அலெக்ஸ்பாண்டி கடலுர் அரசு பல் மருத்துவக்கல்லூரியையும், அவ்வை மாநகராட்சி பள்ளி மாணவி கவுசல்யா மதுரை சி.எஸ்.ஐ. பல் மருத்துவக்கல்லூரியையும், செக்காணுரணி அரசுப்பள்ளி மாணவி புவனேசுவரி குன்றத்தூர் மாதா பல் மருத்துவ கல்லூரியையும் தேர்ந்தெடுத்தனர்.

Next Story