தீத்தடுப்பு பணியில் வளர்ப்பு யானைகள்


தீத்தடுப்பு பணியில் வளர்ப்பு யானைகள்
x
தினத்தந்தி 29 Jan 2022 6:41 PM IST (Updated: 29 Jan 2022 6:41 PM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் தீத்தடுப்பு பணியில் சின்னத்தம்பி உள்ளிட்ட வளர்ப்பு யானைகள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. இந்த வளர்ப்பு யானைகள் சாலையோரங்களில் உள்ள காய்ந்த மூங்கில்களை அகற்றின.

பொள்ளாச்சி

ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் தீத்தடுப்பு பணியில் சின்னத்தம்பி உள்ளிட்ட வளர்ப்பு யானைகள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. இந்த வளர்ப்பு யானைகள் சாலையோரங்களில் உள்ள காய்ந்த மூங்கில்களை அகற்றின.

மூங்கில் காடுகள்

தமிழகத்தில் உள்ள புலிகள் காப்பகத்தில் ஒன்றான ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் ஏராளமான மூங்கில்கள் வளர்ந்து காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் தொடங்கும் முன் வனத்துறை சார்பில் தீத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதன் ஒருபகுதியாக சாலையோரங்களில் உள்ள புதர்கள், புற்கள் வெட்டி அகற்றப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டு தீத்தடுப்பு கோடுகள் உருவாக்கப்படும்.
மூங்கில்கள் 35 ஆண்டுகள் அல்லது 40 ஆண்டுகளை கடந்ததும் பூத்து குலுங்கும். பின்னர் இந்த மூங்கில் மரங்கள் காய்ந்து விடும். இதுபோன்ற மூங்கில்கள் கோடை காலத்தில் ஒன்றுடன், ஒன்று உரசுவதால் காட்டுத்தீ ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் சாலையோரங்களில் காணப்படும் காய்ந்த மூங்கில்கள் மீது பற்ற வைத்த சிகரெட் துண்டுகளை வீசினாலும் பெரிய அளவில் காட்டுத்தீ ஏற்படும். எனவே இதுபோன்ற காய்ந்த மூங்கில்கள் அகற்றப்படுவது வழக்கம். 

வளர்ப்பு யானைகள் மூலம் அகற்றம்

இந்த ஆண்டில் சின்னதம்பி, முத்து, காவேரி, அபிநயா உள்ளிட்ட வளர்ப்பு யானைகளை பயன்படுத்தி இந்த மூங்கில்கள் அகற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக சேத்துமடை-ஆனைமலை புலிகள் காப்பக சாலையோரங்களில் சரிந்து கிடங்கும் காய்ந்த மூங்கில்கள் வளர்ப்பு யானைகள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மண்டல முதன்மை வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் கூறியதாவது:-
மூங்கில்கள் குறிப்பிட்ட ஆண்டிற்கு பின்னர் பூத்து குலுங்கி, காய்ந்து விடும். பிற வனப்பகுதிகளில் இதுபோன்ற காய்ந்த மூங்கில்களை அகற்றி, விற்பனை செய்ய அனுமதி உண்டு. ஆனால் ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் இதுபோன்ற மூங்கில்களை வெட்டி அகற்றி விற்பனை செய்ய அனுமதி கிடையாது. எனவே சரிந்து கிடக்கும் காய்ந்த மூங்கில்கள் வளர்ப்பு யானைகள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது-.
மேலும் கோடை காலம் தொடங்குவதை முன்னிட்டு அட்டப்பாடி சாலை, வால்பாறை, ஆனைமலை உள்பட பல்வேறு சாலைகளில் 150 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
1 More update

Next Story