‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 29 Jan 2022 7:34 PM IST (Updated: 29 Jan 2022 7:34 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9962818888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

நடைபாதை சீரமைக்கப்படுமா?

பந்தலூர்  அருகே சேரம்பாடியில் அரசு நடுநிலைப்பள்ளி அருகே கால்நடை ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு செல்லும் நடைபாதையை பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் ஆஸ்பத்திரிக்கு வரும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அந்த நடைபாதை உடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அவர்கள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே அந்த நடைபாதையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

செல்வி, சேரம்பாடி.

சாலையில் சுற்றித்திரியும் ஆடுகள்

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி சிக்னல் சந்திப்பு பகுதியில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் சுற்றித்திரிந்து வருகின்றன. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சாலைகளில் சுற்றித்திரியும் ஆடுகளை பிடித்து செல்ல வேண்டும்.

கந்தசாமி, பாப்பநாயக்கன்பாளையம்.

சாக்கடை குழாயில் அடைப்பு

ஊட்டி கமர்சியல் சாலையோரத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல நடைபாதை செல்கிறது. இங்கு நடைபாதை அடியில் சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியே வழிந்தோடுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பொதுமக்கள் அந்த இடத்தை கடந்து செல்ல முடியாமல் முகம் சுளிக்கின்றனர். எனவே சாக்கடை குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய வேண்டும்.

அருண், பழைய அக்ரஹாரம், ஊட்டி.

திறந்தவெளி ‘பார்’

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் சில இடங்கள் திறந்தவெளி ‘பார்’ போல பயன்படுத்தப்பட்டு வருகிறது. மது பிரியர்கள் மது அருந்தி விட்டு காலி பாட்டில்களை தூக்கி வீசி செல்கின்றனர். இது உடைந்து மற்றவர்களின் கால்களை பதம் பார்க்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக அங்கு பெண்கள் வந்து செல்ல அச்சம் அடைகின்றனர். ஆகவே, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திவ்யா, பாம்பேகேசில், ஊட்டி.

குண்டும், குழியுமான சாலை

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் கலெக்டர் பங்களாவுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் நடக்கிறது. எனவே அந்த சாலையை விரைவாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

டேவிட், கோவை.

நடுரோட்டில் பள்ளம்

கோவை நவஇந்தியா சிக்னலில் இருந்து உடையாம்பாளையம் செல்லும் சாலை பல்வேறு காரணங்களுக்காக தோண்டப்பட்டது. அதன்பிறகு சாலை சீரமைக்கப்பட்டாலும், தரமின்றி உள்ளது. இதனால் அங்கு நடுரோட்டில் பள்ளம் உருவாகி உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. தற்போது அந்த குழி உள்ள இடத்தை சுற்றிலும், தடுப்பு அமைக்கப்பட்டு செடி நட்டு வைக்கப்பட்டு உள்ளது. விரைவாக அந்த குழியை மூடி, சாலையை தரமாக அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

ராஜ், கோவை. 

ரவுண்டானா அமைக்கும் பணி

பொள்ளாச்சி-உடுமலை மெயின் ரோட்டில் போக்குவரத்து மிகுந்து காணப்படும் தேர்நிலை அருகே ரவுண்டானா அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இந்த பணி வேகமாக நடக்காமல் ஆமை வேகத்தில் நடப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி ரவுண்டானா அமைக்கும் பணியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விரைவுப்படுத்த முன்வரவேண்டும்.

முருகன், பொள்ளாச்சி.

தெருநாய்கள் தொல்லை

கோவை செல்வபுரம் முத்துசாமி காலனியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. இதனால் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே அங்கு தெருநாய்கள் தொல்லை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

நாகராஜன், செல்வபுரம்

போக்குவரத்து நெருக்கடி

பெரியநாயக்கன்பாளையத்தில் மேம்பால கட்டுமான பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது. அங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தை நடப்பதால், போக்குவரத்து நெருக்கடி மிகுந்துவிடும். இதை சீர் செய்ய பெரியநாயக்கன்பாளையம் மெயின்ரோடு, எல்.எம்.டபிள்யூ சாலை, பெருமாள் கோவில் சாலை, கிரிமோட்டிரியம் சாலையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட வேண்டும். 

ஜெகதீஸ்பாபு, பெரியநாயக்கன்பாளையம்.

சுகாதார சீர்கேடு

சரவணம்பட்டி சரவணா கூட்டுறவு நகரில் இருந்து எம்.ஜி. கார்டன் செல்லும் வழியில் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதோடு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த குப்பைகள் சாலை வரை சிதறடிக்கப்படுவதால் விபத்து வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

விவேகானந்தன், சரவணம்பட்டி.

1 More update

Next Story