ஒடிசாவில் இருந்து விழுப்புரத்திற்கு கடத்தி வந்த ரூ.3 லட்சம் கஞ்சா பறிமுதல் 2 வாலிபர்கள் கைது


ஒடிசாவில் இருந்து விழுப்புரத்திற்கு கடத்தி வந்த ரூ.3 லட்சம் கஞ்சா பறிமுதல் 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 29 Jan 2022 4:56 PM GMT (Updated: 29 Jan 2022 4:57 PM GMT)

ஒடிசாவில் இருந்து விழுப்புரத்திற்கு கடத்தி வந்த ரூ.3 லட்சம் கஞ்சாவை பறிமுதல் செய்து 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனா்.


விழுப்புரம், 

 விழுப்புரம் மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு டில்லிபாபு, இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ ஆகியோர் தலைமையிலான போலீசார், விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது  அங்கு ஒரு சாக்குமூட்டையுடன் வந்த 2 பேரை பிடித்து, சாக்கு மூட்டையை சோதனை செய்ததில் அந்த மூட்டையினுள் 6 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், இருவரும் ஒடிசா மாநிலம் புதகாமன் சார்பட்டா பகுதியை சேர்ந்த பிரசன்ன ராணா மகன் பிஸ்வால் ராணா (வயது 27), குடமெண்டா பகுதியை சேர்ந்த பலிஸ்டாபோயி மகன் சித்தேஸ்வர்போயி (25) என்பதும், இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் ஊழியர்களாக வேலை செய்து வருவதும் தெரிந்தது. 

மேலும் விசாரணையில் அவர்கள் இருவரும் ஒடிசாவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இறங்கியதும், பின்னர் அங்கிருந்து தமிழகத்தில் விழுப்புரம், சேலம், திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக பஸ் மூலம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. 

இதை தொடர்ந்து பிஸ்வால்ராணா, சித்தேஸ்வர்போயி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி வேடம்பட்டில் உள்ள சிறையில் அடைத்தனர்.

Next Story