கன்னியாகுமரியில் புதுமாப்பிள்ளையை கொன்ற வாலிபர் கைது


கவாஸ்கர்
x
கவாஸ்கர்
தினத்தந்தி 29 Jan 2022 5:32 PM GMT (Updated: 29 Jan 2022 5:32 PM GMT)

கன்னியாகுமரியில் புதுமாப்பிள்ளையை கொலை செய்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி, 
கன்னியாகுமரியில் புதுமாப்பிள்ளையை கொலை செய்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுமாப்பிள்ளை கொலை
கன்னியாகுமரி சகாயமாதா தெருவை சேர்ந்தவர் கவாஸ்கர் (வயது 34), மீனவர். இவருக்கு 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் கவாஸ்கர், நண்பரான சுனாமி காலனியை சேர்ந்த ராஜா என்ற இருதய ஜான்ஸ்ராஜாவுடன் (35) கன்னியாகுமரியில் உள்ள ஒரு விடுதியில் மது அருந்தியதாக தெரிகிறது.
அப்போது கவாஸ்கருக்கும், இருதய ஜான்ஸ்ராஜாவுக்கும் இடையே தகராறு நடந்தது. இதில் ஆத்திரம் அடைந்த இருதய ஜான்ஸ்ராஜா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கவாஸ்கரின் கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. உடனே அருகில் இ்ருந்தவர்கள் கவாஸ்கரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கவாஸ்கர் இறந்து விட்டதாக கூறினர்.
3 தனிப்படை அமைப்பு 
இதுபற்றி கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது பிரபல ரவுடியின் மகனுடன் இருதய ஜான்ஸ்ராஜா சேர்ந்து கொண்டு சிலரை மிரட்டி வந்ததாகவும், அதை கவாஸ்கர் கண்டித்து, இருதய ஜான்ஸ் ராஜாவுக்கு அறிவுரை கூறியதாகவும் தெரிய வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜான்ஸ்ராஜா, கவாஸ்கரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. 
இந்த கொலையில் இருதய ஜான்ஸ் ராஜாவை கைது செய்ய இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. 
கைது
3 தனிப்படை போலீசாரும் இருதய ஜான்ஸ் ராஜாவை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று இரவு போலீசார் மகாதானபுரம் ரவுண்டானாவை அடுத்த நரி குளம் அருகே தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது போலீசாரை பார்த்ததும் இருதய ஜான்ஸ் ராஜா தப்பி ஓடினார். அவரை விடாமல் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story