கழிவு பட்டாசுகளை எரித்தபோது வெடி விபத்து; தொழிலாளி பலி

விருதுநகர் அருகே பட்டாசு கழிவுகளை எரித்தபோது நிகழ்ந்த வெடி விபத்தில் ஒருவர் பரிதாபமாக இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே பட்டாசு கழிவுகளை எரித்தபோது நிகழ்ந்த வெடி விபத்தில் ஒருவர் பரிதாபமாக இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
வெடி விபத்து
விருதுநகர் அருகே அம்மன்கோவில்பட்டி புதூரில் சிவகாசியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. நேற்று மாலை பட்டாசு ஆலை அருகே கழிவு பட்டாசுகளை எரித்தனர். அப்போது திடீரென அதில் கிடந்த பட்டாசுகள் வெடித்து சிதறின.
இதில் சம்பவ இடத்தில் இருந்த சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளி ஆறுமுகம்(வயது 50) என்பவர் பலத்த தீக்காயம் அடைந்து பரிதாபமாக இறந்தார்.
மேலும் அம்மன் கோவில்பட்டிபுதூரை சேர்ந்த குபேந்திரன்(28) என்ற பட்டாசு தொழிலாளியும், சிவகாசி விஸ்வநத்தத்தை சேர்ந்த பட்டாசு ஆலை போர்மேன் தெய்வேந்திரன்(33) என்பவரும் படுகாயம் அடைந்தனர்.
கட்டிடங்களுக்கு சேதமில்லை
இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். படுகாயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பட்டாசு ஆலை வளாகத்திற்கு வெளியே வெடி விபத்து ஏற்பட்டதால் ஆலையில் உள்ள கட்டிடங்களுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story