வடமாநில கொள்ளையர் 2 பேர் கைது


வடமாநில கொள்ளையர் 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 Jan 2022 7:36 PM GMT (Updated: 29 Jan 2022 7:36 PM GMT)

வாழப்பாடி பகுதியில் அடுத்தடுத்து 2 பெண்களிடம் தங்கசங்கிலி பறித்த வடமாநில கொள்ளையர்கள் 2 பேரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11½ பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

வாழப்பாடி:-
வாழப்பாடி பகுதியில் அடுத்தடுத்து 2 பெண்களிடம் தங்கசங்கிலி பறித்த வடமாநில கொள்ளையர்கள் 2 பேரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11½ பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
தலைமை ஆசிரியை
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்துள்ள முத்தம்பட்டியை சேர்ந்தவர் சண்முகம், விவசாயி. இவருடைய மனைவி சாந்தா (வயது 58). இவர் முடியனூர் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 26-ந் தேதி அவர் பணிபுரியும் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின கொடியேற்று விழாவில் பங்கேற்க தனது ஊரில் இருந்து புறப்பட்டார். அவர் முத்தம்பட்டி பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்றார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேர், அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இது குறித்து, வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக அன்றைய தினமே, ஆத்தூர் புதுப்பேட்டையை சேர்ந்த மோகன் குமார் என்பவரின் மனைவி மோகனாவிடமும்(32) பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
தனிப்படை
இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாமென தெரிய வந்ததால், இந்த கொள்ளையர்களை விரைந்து கைது செய்ய, சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
அதன்பேரில் வாழப்பாடி துணை போலீஸ்சூப்பிரண்டு முத்துச்சாமி மேற்பார்வையில் தனிப்படை போலீசார், சேசன்சாவடி அருகே நேற்று மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். 
வடமாநில கொள்ளையர்கள்
அப்போது நாட்டுத்துப்பாக்கியை காட்டி போலீசாரை மிரட்டிய இந்த வாலிபர்கள் போலீசாரிடம் பிடிபடாமல் தப்பிச்செல்ல முயற்சித்துள்ளனர்.
அவர்கள் 2 பேரையும் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் இருவரும் உத்தரபிரதேச மாநிலம், முதரவாயல் மாவட்டம் அமரேகா பகுதியை சேர்ந்த சூரியா என்ற புஸ்பேந்திர் என்ற பிங்கி (22) மற்றும் மேராதபாத் மாவட்டம் அஜராப்பூர் பகுதியை சேர்ந்த சதாம்ராஜா (32) என்பது தெரியவந்தது. 
இவர்கள் இருவரும் முத்தம்பட்டி மற்றும் பெரியகிருஷ்ணாபுரத்தில் பெண்களிடம் தங்கச்சங்கிலி பறித்ததும், அவா்கள் இருவரும் சேலம், திருப்பூர், கடலூர் மாவட்டங்களில் பல இடங்களில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கி, 5 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் இருந்து 11½ பவுன் தங்க நகைகள், கவரிங் நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் மீட்டனர். மேலும் அந்த கொள்ளையர்கள் 2 பேரும், அவினாசியில் திருடிய மோட்டார் சைக்கிளுடன் அங்கிருந்து சேலம் மாவட்டத்திற்கு வந்து இந்த நகைப்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
இதுகுறித்து தகவலறிந்த சேலம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ், நேற்று மாலை வாழப்பாடி போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கு துரிதமாக செயல்பட்டு தங்கச்சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்களை பிடித்த தனிப்படை போலீசாரை பாராட்டினார். அப்போது வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துச்சாமி, இன்ஸ்பெக்டர் உமாசங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த கொள்ளையர்கள் 2 பேர், கடந்த 12-ந் தேதி திருப்பூர் அருகே அவினாசிக்கு வந்தனர். இதையடுத்து அந்த பகுதியில் டாஸ்மாக் கடை அருகே மோட்டார் சைக்கிளை திருடிய அவர்கள் இருவரும் அந்த வாகனத்தில் சேலம் மாவட்டத்திற்கு வந்தனர். வரும் வழியில் கொள்ளையர்கள் 15-க்கும் மேற்பட்ட பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்டனர். 
இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்கள் 10-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பறித்தது கவரிங் நகைகள் ஆகும். இதை தெரியாமல் ஏமாந்த அவர்கள் சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி, பெரியகிருஷ்ணாபுரம் பகுதியில் தலைமை ஆசிரியை உள்பட 2 பெண்களிடம் தங்கசங்கிலியை கடந்த 26-ந் தேதி  பறித்துள்ளனர். இந்த கொள்ளையர்களை, தனிப்படை போலீசார் 3 நாட்களில் கைது செய்துள்ளனர்.

Next Story