கொரோனாவுக்கு ஒரே நாளில் 5 பேர் பலி


கொரோனாவுக்கு ஒரே நாளில் 5 பேர் பலி
x
தினத்தந்தி 29 Jan 2022 7:36 PM GMT (Updated: 29 Jan 2022 7:36 PM GMT)

சேலம் மாவட்டத்தில் புதிதாக 1,264 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மூதாட்டி உள்பட 5 பேர் ஒரே நாளில் பலியாகியுள்ளனர்.

சேலம்:-
சேலம் மாவட்டத்தில் புதிதாக 1,264 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனாவுக்கு மூதாட்டி உள்பட 5 பேர் ஒரே நாளில் பலியாகியுள்ளனர்.
1,264 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தநிலையில் தற்போது நோய் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 1,387 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று புதிதாக 1,264 பேருக்கு நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 336 பேர், ஓமலூரில் 43 பேர், வீரபாண்டியில் 38 பேர், ஆத்தூரில் 30 பேர், அயோத்தியாபட்டணத்தில் 31 பேர், தாரமங்கலத்தில் 22 பேர், கொங்கணாபுரத்தில் 19 பேர், மேட்டூரில் 18 பேர், வாழப்பாடியில் 20 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 753 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், சேலம் மாவட்டத்துக்கு கோவையில் இருந்து வந்த 22 பேர், ஈரோட்டில் இருந்து வந்த 28 பேர், சென்னையில் இருந்து வந்த 31 பேர், விழுப்புரத்தில் இருந்து வந்த 28 பேர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 511 பேருக்கு நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
5 பேர் பலி
இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 750 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், நோய் தொற்றுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 994 பேர் குணமடைந்துவிட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனாவுக்கு 8 ஆயிரத்து 376 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த 35 வயதான பெண் ஒருவரும், 58 வயதான ஆண் ஒருவரும், 67 வயதான ஆண் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதுதவிர, 67 வயதான ஆண் ஒருவரும், 88 வயதான மூதாட்டியும் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று அவர்கள் உயிரிழந்தனர். மாவட்டத்தில் ஒரேநாளில் மூதாட்டி உள்பட 5 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story