பாளையங்கோட்டை போலீஸ் நிலையம் அருகே பயங்கரம்: தி.மு.க. வட்ட செயலாளர் வெட்டிக்கொலை காரில் வந்த மர்மகும்பல் வெறிச்செயல்


பாளையங்கோட்டை போலீஸ் நிலையம் அருகே பயங்கரம்: தி.மு.க. வட்ட செயலாளர் வெட்டிக்கொலை காரில் வந்த மர்மகும்பல் வெறிச்செயல்
x
தினத்தந்தி 29 Jan 2022 8:20 PM GMT (Updated: 29 Jan 2022 8:20 PM GMT)

தி.மு.க. வட்ட செயலாளர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்

நெல்லை:
பாளையங்கோட்டை போலீஸ் நிலையம் அருகே நேற்றிரவில் தி.மு.க. வட்ட செயலாளர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். காரில் வந்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மகும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தி.மு.க. வட்ட செயலாளர்
நெல்லை பாளையங்கோட்டை யாதவர் உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. இவருடைய மகன் பொன்னுதாஸ் என்ற அபே மணி (வயது 33).  35-வது வார்டு தி.மு.க. வட்ட செயலாளரான இவர் அப்பகுதியில் மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் ஒர்க்‌ஷாப் நடத்தி வந்தார்.
இவருடைய தாயார் பேச்சியம்மாள், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதற்காக விருப்ப மனு தாக்கல் செய்து இருந்தார். அதற்கான நேர்காணல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்தது.
வெட்டிக்கொலை
இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணியளவில் அபே மணி பாளையங்கோட்டை போலீஸ் நிலையம் அருகே உள்ள தனது வீட்டின் முன்பு நின்று சிலருடன் பேசி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு காரில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் வந்தது. காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அபே மணியை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். 
இதில் படுகாயம் அடைந்த அபே மணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் காரில் ஏறி தப்பிச்சென்று விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
காரணம் என்ன?
பின்னர் கொலையான அபே மணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்ைட ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தி.மு.க.வினர் பலர் திரண்டதால் பரபரப்பு நிலவியது.
அபே மணி சமீபத்தில் டாஸ்மாக் பார் ஏலம் எடுத்து இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. எனவே, இது தொடர்பான முன்விரோதத்தில் அவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட அபே மணிக்கு முருகம்மாள் என்ற மனைவியும், சபேசன் என்ற மகனும், முத்து சரண்யா என்ற மகளும் உள்ளனர்.
நெல்லையில் தி.மு.க. வட்ட செயலாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story