தினத்தந்தி புகார் பெட்டி


அரியலூர்
x
அரியலூர்
தினத்தந்தி 30 Jan 2022 5:35 PM GMT (Updated: 30 Jan 2022 5:35 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

வழிகாட்டி பெயர்ப் பலகையை பெரியதாக வைக்க கோரிக்கை 
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்தில் ஜெமின் பேரையூர் கிராமம் உள்ளது. இந்த நிலையில் இந்த ஊருக்கான வழிகாட்டி பெயர்ப் பலகை ஆலத்தூர்-அரியலூர் சாலையில் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஊர்ப்பெயர் மிகவும் சிறியதாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோருக்கு அது சரியாக தெரியவில்லை. இதனால் வெளியூர் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அந்த வழிகாட்டி பெயர்ப் பலகையை பெரிதாக வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வினோத், ஜெமின் பேரையூர், பெரம்பலூர்.


குடிநீர் குழாயில் உடைப்பு
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சாலையில் இலுப்பூர் கடைவீதி பகுதியில் காவிரி குடிநீர் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக
செல்கிறது. இதனால் அந்த இடம் குளம்போல் காட்சி அளிக்கிறது. இது போன்று அதே இடத்தில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அவ்வழியாக நடந்து செல்ல முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவி, அன்னவாசல், புதுக்கோட்டை.

சேதமடைந்த பயணிகள் நிழற்குடை
புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் போலீஸ் நிலையம் அருகே ஒரு பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் நிழற்குடையின் பல்வேறு பகுதிகள் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் மேற்கூரையில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் இந்த பஸ் நிறுத்தத்திற்கு வரும் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்தாமல் நிழற்குடைக்கு வெளியே பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். எனவே சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், காரையூர், புதுக்கோட்டை.

ஆபத்தான குடிநீர் தொட்டி
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றியம் கைக்குறிச்சி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
பொதுமக்கள், திருவரங்குளம், புதுக்கோட்டை

குண்டும், குழியுமான சாலை 
கரூர் மாவட்டம், பொய்யாமணியிலிருந்து திருச்சி மாவட்டம்,பெட்டவாய்த்தலைக்கு செல்லும் தார்சாலை பல வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது அந்த வழியாக ஏராளமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இந்த தார்சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டு குழியுமாக பல வருடங்களாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டு வருகின்றனர். இதனால் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கரூர்

Next Story