வீட்டு தனிமை சிகிச்சை எண்ணிக்கையும் குறைகிறது: குமரியில் புதிதாக 500 பேருக்கு கொரோனா


வீட்டு தனிமை சிகிச்சை எண்ணிக்கையும் குறைகிறது: குமரியில் புதிதாக 500 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 30 Jan 2022 6:06 PM GMT (Updated: 30 Jan 2022 6:06 PM GMT)

குமரி மாவட்டத்தில் புதிதாக 500 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. வீட்டு தனிமையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் புதிதாக 500 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. வீட்டு தனிமையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. 
கொரோனா பரவல்
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் குறைந்துள்ளது. தினசரி பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் கட்டுபாடுகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு 605 ஆக இருந்த கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 500 ஆக குறைந்துள்ளது.
அதாவது குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மூலமாகவும், சோதனை சாவடிகள் மற்றும் களப்பணியாளர்கள் மூலமாகவும் மொத்தம் 4,063 பேருக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் மொத்தம் 500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக நாகர்கோவில் மாநகரில் மட்டும் 88 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சிகிச்சையில் 3,810 பேர்
இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 77 ஆயிரத்து 491 ஆக உயர்ந்துள்ளது. இதில் நோய் தொற்று அதிகம் உள்ளவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், தொற்று பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் தற்போது 3,810 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இதில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 65 பேரும், கொரோனா கவனிப்பு மையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 234 பேரும், வீட்டு தனிமை சிகிச்சையில் 3,511 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
வீட்டு தனிமையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் மேல் இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததால் வீட்டு தனிமையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது.

Next Story