புதுக்கோட்டையில் 2,48,964 பேர் வாக்களிக்க உள்ளனர்


புதுக்கோட்டையில் 2,48,964 பேர் வாக்களிக்க உள்ளனர்
x
தினத்தந்தி 30 Jan 2022 7:18 PM GMT (Updated: 30 Jan 2022 7:18 PM GMT)

புதுக்கோட்டையில் 2 லட்சத்து 48 ஆயிரத்து 964 பேர் எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

புதுக்கோட்டை, 
உள்ளாட்சி தேர்தல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கும், அறந்தாங்கி நகராட்சியில் 27 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கும் வருகிற 19-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதேபோல் அன்னவாசல், ஆலங்குடி, அரிமளம், இலுப்பூர், கீரனூர், கீரமங்கலம், பொன்னமராவதி, கறம்பக்குடி ஆகிய 8 பேரூராட்சிகளில் தலா 15 வார்டு உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடக்கிறது.
வார்டுகள் ஒதுக்கீடு
புதுக்கோட்டை நகராட்சியில் மொத்தமுள்ள 42 வார்டுகளில் ஆதி திராவிடர் (பொது) பிரிவுக்கு 2 வார்டுகளும், ஆதி திராவிடர் (பெண்கள்) பிரிவுக்கு 3 வார்டுகளும், பெண் (பொது) பிரிவுக்கு 18 வார்டுகளும் என மொத்தம் 23 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 19 வார்டுகள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அறந்தாங்கி நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில், ஆதி திராவிடர் (பொது) பிரிவுக்கு 1 வார்டும், ஆதி திராவிடார் (பெண்கள்) பிரிவுக்கு 1 வார்டும், பெண்கள் (பொது) பிரிவுக்கு 13 வார்டுகளும் என மொத்தம் 15 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 12 வார்டுகள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 8 பேரூராட்சிகளில் உள்ள 120 வார்டுகளில் ஆதி திராவிடர் (பெண்கள்) பிரிவுக்கு 11 வார்டுகளும், ஆதி திராவிடர் (பொது) பிரிவுக்கு 6 வார்டுகளும், பெண்கள் (பொது) பிரிவுக்கு 53 வார்டுகளும் என மொத்தம் 70 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 50 வார்டுகள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2,48,964 வாக்காளர்கள்
புதுக்கோட்டை நகராட்சியில் 63,739 ஆண் வாக்காளர்களும், 68,472 பெண் வாக்காளர்களும், 17 இதர வாக்காளர்களும் என மொத்தம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 228 வாக்காளர்கள் உள்ளனர். அறந்தாங்கி  நகராட்சியில் 17,090 ஆண் வாக்காளர்களும், 18,601 பெண் வாக்காளர்களும், 2 இதர வாக்காளர்கள் என மொத்தம் 35,693 வாக்காளர்கள் உள்ளனர். 8 பேரூராட்சிகளில் 39,663 ஆண் வாக்காளர்களும், 41,377 பெண் வாக்காளர்களும், 3 இதர வாக்காளர்கள் என மொத்தம் 81,043 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள 10 நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் 1 லட்சத்து 20 ஆயிரத்து 492 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 28 ஆயிரத்து 450 பெண் வாக்காளர்களும், 22 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 48 ஆயிரத்து 964 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

Next Story