வங்கியில் ரூ.1¼ கோடி மோசடி செய்த கேரள ரியல் எஸ்டேட் அதிபர் கைது


வங்கியில் ரூ.1¼ கோடி மோசடி செய்த கேரள ரியல் எஸ்டேட் அதிபர் கைது
x
தினத்தந்தி 31 Jan 2022 8:35 AM GMT (Updated: 31 Jan 2022 8:35 AM GMT)

கோவையில் போலி நகைகளை வங்கியில் அடகு வைத்து ரூ.1¼ கோடி மோசடி செய்த வழக்கில் கேரள ரியல் எஸ்டேட் அதிபரை கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை

கோவையில் போலி நகைகளை வங்கியில் அடகு வைத்து ரூ.1¼ கோடி மோசடி செய்த வழக்கில் கேரள ரியல் எஸ்டேட் அதிபரை கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ரெஜி (வயது 47). ரியல் எஸ்டேட் அதிபர் கோவையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவர் உள்பட 3 பேர் சேர்ந்து சேரன்மாநகர் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் 4 கிலோ போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.1 கோடியே 32 லட்சம் கடன் பெற்று உள்ளனர்.

இதனிடையே அந்த வங்கியின் மண்டல மேலாளர் சுப்பிரமணியனுக்கு, சேரன்மாநகரில் உள்ள வங்கியில் சிலர் போலி நகைகளை அடமானம் வைத்து நகைக்கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக புகார் வந்ததையடுத்து அவர்  அந்த வங்கிக்கு சென்று நகைக்கடன் குறித்து சோதனை நடத்தினர். அப்போது 4 கிலோ போலி நகைகளுக்கு வங்கி கடன் வழங்கப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், கேரள ரியல் எஸ்டேட் அதிபர் ரெஜி, மதன்குமார், ஹேமமாலினி ஆகியோர் வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்றதும், இதற்கு நகை மதிப்பீட்டாளர்கள் தர்மலிங்கம், செல்வராஜ் ஆகியோர் இதற்கு உடந்தையாக இருந்தும் தெரியவந்தது.


இதையடுத்து மண்டல மேலாளர் சுப்பிரமணியன் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.1¼ கோடி மோசடி செய்த வழக்கில்  ரெஜியை கோவை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story