‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 31 Jan 2022 11:09 AM GMT (Updated: 31 Jan 2022 11:09 AM GMT)

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மீண்டும் வெளிச்சம் கிடைத்தது

சென்னை குரோம்பேட்டை திருநீர்மலை மெயின் ரோடு டி.எஸ்.லட்சுமண் நகர் 2-வது தெருவில் மின்விளக்கு எரியாமல் இருப்பதால் மக்கள் படும் சிரமங்கள் குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக களப்பணியில் ஈடுபட்டனர். தற்போது அப்பகுதிக்கு மீண்டும் வெளிச்சம் கிடைத்துள்ளது.

வளைந்த கம்பம் மாற்றப்படுமா?

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் வடக்கு மாதா தெருவில் உள்ள சோலார் பார்க்கிங் டிக்கெட் மெஷின் கம்பம் உடைந்து தொங்கியவாறு ஆபத்தான நிலையில் இருக்கிறது. எப்போது கிழே விழும் என்று தெரியவில்லை. எனவே இந்த கம்பத்தை சீரமைக்க வேண்டும்.

- கந்தன், மயிலாப்பூர்.வீணாகும் குடிநீர்

சென்னை குரோம்பேட்டை ராம்பட்சி நகரில் புதிதாக குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. தற்போது இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் வீணாகி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே குடிநீர் வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

- ஜெயசாகர், குரோம்பேட்டை.

கால்வாய் மூடி சேதம்

சென்னை போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரி அருகே உள்ள நடைபாதையில் உள்ள கால்வாய் மூடி சேதம் அடைந்து திறந்த நிலையில் இருக்கிறது. பாதசாரிகள் சற்று கவனம் தவறினாலும் கூட கீழே விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஏகவள்ளி, பரங்கிமலை.

எப்போது தீர்வு கிடைக்கும்?

கோவூர் ஊராட்சியில் குன்றத்தூர்-போரூர் சாலையில் சத்யா நகர் பெட்ரோல் பங்க் எதிரே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதை சரி செய்வதற்காக 5 அடி ஆழத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பு குழி தோண்டப்பட்டது. எனினும் இப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவில்லை. தற்போது இந்த பள்ளம் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது.

- விஜயன், கோவூர்.

உடைந்த தரைப்பாலம் எப்போது சீரமைக்கப்படும்?

வடகிழக்கு பருவமழையின்போது கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நெடியம் கிராமத்தில் உள்ள தரைப்பாலம் சேதம் அடைந்தது. ஆனால் இந்த பாலம் சீரமைக்கப்படாமல் இருக்கிறது. இதனால் ஆபத்தான முறையில், உயிரை கையில் பிடித்துக் கொண்டு பாலத்தை கடந்து செல்லும் நிலை இருக்கிறது. எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நேரிடும் முன்பாக இந்த தரைப்பாலத்தை புதுப்பித்து தருவதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கிராம மக்கள்.குப்பையை கொளுத்துவதால் காற்றுமாசு

செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூர் தமிழ்நாடு காவலர் குடியிருப்புக்கு செல்லும் சாலையோரத்தில் குப்பை கழிவுகள் கொட்டப்படுகின்றன. மேலும் குப்பையை கொளுத்தியும் விடுகின்றனர். இதனால் காற்றுமாசு ஏற்படுகிறது. சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.

- புனியன், மேலக்கோட்டையூர்.

மின்சார வாரியம் கவனத்துக்கு...

ஆவடி பட்டாபிராம் கோபாலபுரம் (மேற்கு) அம்பேத்கர் தெருவில் உள்ள மின்கம்பம் உறுதித்தன்மையை இழந்து ஆபத்தான நிலையில் இருக்கிறது. புழுதிவாக்கம் அன்னை தெரசா நகர் 2-வது மெயின் ரோட்டில் உள்ள மின்கம்பம் விரிசலுடன் அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது. கீழ்க்கட்டளை ஈச்சங்காடு மேம்பாலத்தில் பல்லாவரம் நோக்கி செல்லும் சர்வீஸ் சாலையில் மின் விளக்குகள் எரியாமல் உள்ளது.

- பொதுமக்கள்.

கழிவுநீர் பிரச்சினைகள்

கிண்டி மடுவன்கரை மசூதி காலனி 5-வது மற்றும் 6-வது தெரு, தாம்பரம் சேலையூர் அகரம் மெயின் ரோடு ரங்கநாதன் 3-வது தெரு அருகே அமைந்துள்ள பாரத் மருத்துவக்கல்லூரி எதிரே உள்ள சாலை, ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட கொளப்பாக்கம் ஊராட்சி ஸ்ரீநாராயணா நகர், பூந்தமல்லி மேப்பூர்-தாங்கல் அரசு பள்ளி வளாகம், முடிச்சூர் ஊராட்சி 115-வது வார்டு மேற்கு லட்சுமி நகர், நேதாஜி நகர் குறுக்கு தெரு போன்ற இடங்களில் கழிவுநீர் பிரச்சினை தொடர்கதையாக இருக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு கண்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

- பொதுமக்கள்.

தாம்பரம் வட்ட வழங்கல் அதிகாரிக்கு கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் பகுதியில் 3 ரேஷன் கடைகள் உள்ளது. இதில் கடை எண் 2-ல் அதிக குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதனால் இந்த கடையில் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது. மற்ற 2 கடைகளிலும் கூட்டம் குறைவாக இருக்கிறது. எனவே கடை எண்-2 ல் இருக்கும் அட்டைதாரர்களை இந்த 2 கடைகளுக்கும் பிரித்து அனுப்புவதற்கு தாம்பரம் வட்ட வழங்கல் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சமூக ஆர்வலர் சண்முகநாதன்.

பஸ் நிலையத்தில் சுகாதார சீர்கேடு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள குப்பைத்தொட்டி பராமரிப்பின்றி உள்ளது. மேலும் குப்பைகள் முறையாக அள்ளப்படுவது இல்லை. இதனால் துர்நாற்றம் வீசி, இப்பகுதி சுகாதார சீர்கேடாக காட்சி அளிக்கிறது. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. எனவே மதுராந்தகம் நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வியாபாரிகள் சங்கம்.வெளிச்சம் தராத உயர் கோபுர மின்விளக்கு

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் நகரில் ஜெ.என்.சாலையில் திருவள்ளூர் பஸ் நிலைய சந்திப்பில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு பல மாதங்களாக எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு பணி முடிந்து வீடு திரும்பும் தொழிலாளர்கள் சிரமம் அடைகிறார்கள். எனவே இப்பிரச்சினைக்கு மின்வாரிய அதிகாரிகள் திர்வு காண வேண்டும்.

- உதயகுமார், திருவள்ளூர்.


Next Story