திருவள்ளூர் நகராட்சியில் 2 நாட்களில் ரூ.12 லட்சம் வரி வசூல்


திருவள்ளூர் நகராட்சியில் 2 நாட்களில் ரூ.12 லட்சம் வரி வசூல்
x
தினத்தந்தி 31 Jan 2022 3:03 PM GMT (Updated: 31 Jan 2022 3:03 PM GMT)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி திருவள்ளூர் நகராட்சியில் கடந்த 2 நாட்களில் ரூ.12 லட்சம் வரி வசூலானது. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் தங்களது நிலுவை வரிகளை கட்டுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நகர்புற உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இதனையடுத்து வேட்பு மனுத்தாக்கல் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. மேலும் பிப்ரவரி 4-ந் தேதி வரையில் நடைபெற உள்ளது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் ஆகிய நகர்புற உள்ளாட்சிகளில் வேட்பு மனுத்தாக்கலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. ஆனால் கடந்த 2 நாட்களாக ஒருவர் கூட வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை.

தடையில்லா சான்று

இதற்கிடையே திருவள்ளூர் நகராட்சியில் வார்டு உறுப்பினராக போட்டியிட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சுயேட்சைகள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கடை பாக்கி, தொழில் வரி, காலிமனை வரி, வீட்டு வரி, தண்ணீர் வரி மற்றும் பாதாள சாக்கடை வரி ஆகியவைகளை நிலுவையில் வைத்திருந்தனர். மேலும் நிலுவை வரிகளை செலுத்தியவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்பது தேர்தல் விதிமுறை.

இந்த நிலையில் திருவள்ளூர் நகராட்சியில் போட்டியிட விரும்புவோர் நிலுவையில் உள்ள அனைத்து வரிகளையும் செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் வரிகளை செலுத்தியவர்களுக்கு தேர்தலில் போட்டியிட தடையில்லா சான்று வழங்கப்படுகிறது. இதன் மூலம் கடந்த 2 நாட்களில் ரூ.12 லட்சத்து 10 ஆயிரம் வரை வரி வசூலாகியுள்ளது.


Next Story