திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் தை அமாவாசையையொட்டி மாட்டு வண்டிகளில் வந்த பக்தர்கள் சாமி தரிசனம்


திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் தை அமாவாசையையொட்டி மாட்டு வண்டிகளில் வந்த பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 31 Jan 2022 4:13 PM GMT (Updated: 2022-01-31T21:43:56+05:30)

திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் தை அமாவாசையையொட்டி மாட்டு வண்டிகளில் வந்த பக்தர்கள் சாமி தரிசனம்

தளி:
திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் தை அமாவாசையையொட்டி மாட்டு வண்டிகளில் வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அமணலிங்கேஸ்வரர் கோவில்
உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலைஅடிவாரத்தில் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் பிரம்மா, சிவன், விஷ்ணு சுயம்புவாக ஒரே குன்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை, கார்த்திகை, பிரதோஷம், மகா சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்வதற்காக சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் வெளிமாவட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர்.அந்த வகையில் நேற்று நடைபெற்ற தை அமாவாசை விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் மதியம் முதல் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் குதிரைகள் மற்றும் மாடுகள் பூட்டிய வண்டியில் வந்தனர். 
அருவியில் குளிக்க தடை
பின்னர் அவர்கள் இரவு முழுவதும் பெருமாள் கோவில் மற்றும் அணைப்பகுதியில் தங்கிக்கொண்டனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கு நேற்று கோவில் நிர்வாகம் தடை விதித்தது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அதைத்தொடர்ந்து நேற்று அதிகாலையில் எழுந்து கோவில் முன்பு உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு மூர்த்திகளை சாமி தரிசனம் செய்தனர். 
ஒரு சிலர் தங்களது முன்னோர்களுக்கு பாலாற்றின் கரையில் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்தனர். இதனால் கோவில் மற்றும் அருவி பகுதியில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
சப்பரம்
மேலும் மும்மூர்த்திகள் குன்றில் அமர்ந்து அருள்பாலித்து வருவதால் கோபுரம் கட்டப்படவில்லை. 
இதனால் கோபுரத்துக்கு பதிலாக சுமார் 200 ஆண்டுகளாக காகிதம், பாய் மற்றும் மூங்கில்களால் கோபுர வடிவில் கலசங்களுடன் செய்யப்பட்ட சப்பரத்தை குன்றின் மீது வைத்து பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். 
இதற்காக ஒவ்வொரு வருடமும் தை அமாவாசையன்று குன்றின் மீது வைக்கப்பட்ட சப்பரத்தை புதுப்பிப்பதற்காக கட்டளைதாரர்கள் பூலாங்கிணர் கிராமத்திற்கு எடுத்துச் செல்வார்கள். அதைத் தொடர்ந்து சுமார் ஒரு மாதத்திற்கு சப்பரம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வரும்.
மகாசிவராத்திரி
அதன் பின்பு புதுப்பிக்கப்பட்ட சப்பரத்தை மாசி மாதம் வருகின்ற மகாசிவராத்திரியன்று காலை பூலாங்கிணரில் இருந்து வேலூர், வாளவாடி, தளி ஆகிய ஊர்கள் வழியாக திருமூர்த்தி மலைக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. 
அந்த வகையில் நேற்று பூலாங்கிணரில் இருந்து வருகை தந்த கட்டளைதாரர்கள் கோவிலின் மீது சேதமடைந்த சப்பரத்தை புதுப்பிப்பதற்காக எடுத்துச்சென்றனர். தை அமாவாசையையொட்டி தளி போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முன்னோர்களுக்கு பிண்டம்
பாக்ஸ் முன்னோர்களுக்கு தர்ப்பணம் பச்சரிசிமாவு, தேன், கரும்பு சக்கரை, நெய், எள், பால், தயிர் உள்ளிட்டவற்றால் உருவாக்கப்படுவதே பிண்டம் ஆகும். அதை முன்னோர்களுக்கு செலுத்தி அவர்களது ஆசியை பெறுவதில் தை மற்றும் ஆடி அமாவாசை நாட்கள் முக்கியத்துவம் வைக்கிறது. 
அன்றைய தினம் ஆற்றங்கரையில் அமர்ந்து வாழை இலையை விரித்து மாவிலை தேங்காயை கொண்டு கலசம் வைத்து பாகற்காய், அகத்திகீரை, புடலை, கேரட், வாழைக்காய் உள்ளிட்ட காய்கறிகளுடன் வேட்டி துண்டு சேர்த்து மந்திரங்கள் ஓதி 27 தலைமுறை முன்னோர்களுக்கும் பிண்டம் வைத்து உபசரிக்க வேண்டும்.
 காகத்திற்கு அன்னம்
அதன் பின்பு வீட்டிற்கு சென்று படையலிட்டு காகத்திற்கு அன்னம் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இதனால் உள்ளம் மகிழும் முன்னோர்கள் தங்களது சந்ததியினரை நோய்நொடியின்றி சகலவிதமான வசதிகளுடன் வாழ வைப்பதாக ஐதீகம்.

Next Story