உடுமலை பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை


உடுமலை பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 31 Jan 2022 4:16 PM GMT (Updated: 31 Jan 2022 4:16 PM GMT)

உடுமலை பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை

தளி:
உடுமலை பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தக்காளி சாகுபடி
உடுமலை சுற்றுவட்டார பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாகும். பருவமழை பெய்யும் போது வானம் அளிக்கும் மழைநீரையும் செயற்கையாகத் தோற்றுவிக்கப்பட்ட அணைகள், கிணறு, ஆழ்குழாய் கிணறுகள் உள்ளிட்டவற்றில் ஏற்படுகின்ற நீராதாரத்தை அடிப்படையாகக் கொண்டும் விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிணற்றுப் பாசன முறையில் ஒரு சில விவசாயிகள் காலிபிளவர், முட்டைக்கோசு உள்ளிட்டவையும் புடலை, பாகல், பீர்க்கன், அவரை, அரசாணி, வெள்ளரி, பூசணி போன்ற கொடி வகை தாவரங்களை சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில் தளி பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
விவசாயிகள் கவலை 
வடகிழக்கு பருவமழையின் காரணமாக உச்சத்தை தொட்ட தக்காளி விலை தற்போது அதள பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. நாற்றுகள் கொள்முதல், நடவு, பராமரிப்பு, உழவு என தக்காளிக்கு செய்த முதலீடு தொகை முழுமையாக திரும்பப் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். இதே நிலை நீடித்தால் தக்காளியை தோட்டத்திலிருந்து பறித்து வந்து சாலையோரங்களில் வீணாக கொட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும். ஒவ்வொரு ஆண்டும் தக்காளி சாகுபடியில் இழப்பு ஏற்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
எனவே தக்காளியைக் கொண்டு ஜாம், பவுடர் உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதற்கு அரசு உதவ வேண்டும். மேலும் இருப்பு வைத்து பயன்படுத்துவதற்கு ஏதுவாக குளிர்பதன வசதியுடன் கூடிய கிடங்குகளை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் விவசாயிகளுக்கும் நஷ்டம் ஏற்படாது. சுழற்சி முறையில் தக்காளி வினியோகம் செய்யப்படுவதுடன் விலையும் சீரான நிலையில் கிடைக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Next Story