தேனி மாவட்டத்தில் 937 பள்ளிகள் இன்று திறப்பு


தேனி மாவட்டத்தில் 937 பள்ளிகள் இன்று திறப்பு
x

தேனி மாவட்டத்தில் 937 பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது.

தேனி:
கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. கொரோனா பரவல் காரணமாக சுழற்சி முறையில் வகுப்புகள் நடந்து வந்தன. ஆனால், தற்போது 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 100 சதவீதம் மாணவ-மாணவிகளுடன் பள்ளிகள் செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 937 உள்ளன. இந்த பள்ளிகளில் சுமார் 2 லட்சம் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த 937 பள்ளிகளும் இன்று திறக்கப்படும். பள்ளிகளை திறக்க தேவையான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.
பள்ளி வகுப்பறைகள் கடந்த சில நாட்களாக சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளுக்கு வரும் மாணவ-மாணவிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும். பள்ளி வளாகத்தில் ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவ-மாணவிகளின் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டு அதன்பிறகே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
மாணவ-மாணவிகள் பள்ளிகளில் கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி, சோப்பு மற்றும் தண்ணீர் போதிய அளவில் ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Next Story