பாலத்தின் தடுப்புச்சுவர் மீது கார் மோதிய கோர விபத்தில் அரசு பள்ளி ஆசிரியை உள்பட 3 பேர் பலி


பாலத்தின் தடுப்புச்சுவர் மீது கார் மோதிய கோர விபத்தில் அரசு பள்ளி ஆசிரியை உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 31 Jan 2022 4:22 PM GMT (Updated: 31 Jan 2022 4:22 PM GMT)

பாலத்தின் தடுப்புச்சுவர் மீது கார் மோதிய கோர விபத்தில் அரசு பள்ளி ஆசிரியை உள்பட 3 பேர் பலி

மூலனூர்:
மூலனூர் அருகே பாலத்தின் தடுப்புச்சுவர் மீது கார் மோதிய கோர விபத்தில் அரசு பள்ளி ஆசிரியை உள்பட 3 பேர் பலியானார்கள். கல்லூரி மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கல்லூரி மாணவி
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் குலசேகரபட்டிணம் ெதருவை சேர்ந்தவர்  ஜீவநாதன். இவருடைய மனைவி பிரேமலதா (வயது 40). இவர் போடிநாயக்கனூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவருடைய மகள் சுபத்ரா (21). இவர் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். 
தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இதையடுத்து சுபத்ராவை கல்லூரியில் கொண்டு விட பிரேமலதா முடிவு செய்தார். 
கார் விபத்து
இதையடுத்து ஒரு காரில் பிரேமலதா, அவருடைய மகள் சுபத்ரா, பிரேமலதா கணவரின் தம்பியான ஓய்வு பெற்ற ஆசிரியர் கல்யாணசுந்தரம் (61) ஆகியோர் போடிநாயக்கனூரில் இருந்து கோவை நோக்கி புறப்பட்டு வந்தனர். காரை போடிநாயக்கனூர்  மேலசொக்கநாதபுரம் இந்திராகாந்தி தெருவை சேர்ந்த நாகராஜ் (26) என்பவர் ஓட்டினார். இவர்களுடைய கார் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் சாலக்கடை பகுதியில் உள்ள பாலத்தில் வந்துகொண்டிருந்தது. 
அப்போது முன்னால் சென்ற வாகனத்தை நாகராஜ் முந்திச்செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதில் எதிர்பாராத விதமாக கார், பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதுவது போல் சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் காரை, வலதுபுறமாக திருப்பினார். இதனால் திடீரென்று முற்றிலும் கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் வலதுபுற தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது. அப்போது பின்னால் வந்த மற்றாரு வாகனமும் விபத்துக்குள்ளான கார்் மீது மோதியது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 3 பேர் பலி
இந்த கோர விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. இதனால் காருக்குள் இருந்த பிரேமலதா, டிரைவர் நாகராஜ் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மாணவி சுபத்ராவும், கல்யாணசுந்தரமும் ரத்த வெள்ளத்தில் காருக்குள் உயிருக்கு போராடினார்கள். இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் மூலனூர் இன்ஸ்பெக்டர் செல்வன், சப்-இன்ஸ்ெபக்டர் நாச்சிமுத்து மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விரைந்து வந்து காருக்குள் சிக்கிய  சுபத்ரா மற்றும் கல்யாணசுந்தரத்தை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆஸ்பத்திரிக்கு போகும் வழியிலேயே கல்யாணசுந்தரம் பலியானார். 
இதையடுத்து மாணவி சுபத்ராவுக்கு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கோர விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story