வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தீ விபத்து


வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தீ விபத்து
x
தினத்தந்தி 31 Jan 2022 4:45 PM GMT (Updated: 2022-01-31T22:15:35+05:30)

வெள்ளலூர் குப்பை கிடங்கில் விடிய, விடிய தீ பிடித்து எரிந்ததால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

கோவை

வெள்ளலூர் குப்பை கிடங்கில் விடிய, விடிய தீ பிடித்து எரிந்ததால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

குப்பை கிடங்கு

கோவை வெள்ளலூர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமாக 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளில் தினமும் சேகரமாகும் 800 டன் குப்பைகள் இங்கு கொட்டப்படுகின்றன. 

இங்கு அதிகளவு குப்பைகள் கொட்டப்படுவதால் அவ்வப்போது குப்பைகளில் தீ விபத்து ஏற்படுகிறது. இந்த நிலையில்  இந்த குப்பை கிடங்கில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மள, மளவென்று பிற பகுதிகளுக்கும் பரவ தொடங்கியது. தீ கொழுந்து விட்டு எரிந்த தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. 

விடிய விடிய போராட்டம் 

இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து 3 தீயணைப்பு வாகனங்களில் 25 வீரர்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அங்கு ஏராளமான குப்பைகள் குவிந்து கிடப்பதால் தீயின் தாக்கம் அதிகமாக இருந்தன. 

இதனால் தீயை அணைக்க வீரர்கள் விடிய, விடிய போராடினர். பின்னர் நேற்று காலை தீ அணைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

தீயணைப்பு வாகனம்

குப்பைகளில் தீப்பிடித்தால் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகை சூழ்ந்தது. இதனால் பலர் மூச்சுத்திணறலால் அவதி அடைந்தனர். மேலும் இங்கு தேங்கி கிடக்கும் குப்பைகளால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. 

இங்குள்ள குப்பைகளை அழிக்க ரூ.60 கோடியில் பயோ மைனிங் திட்டம் செயல்படுத்தப் பட்டது. இதன்மூலம் தினமும் 2 ஆயிரத்து 500 கனமீட்டர் குப்பைகள் அழிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். அந்த திட்டம் என்ன வானது என்று இதுவரை தெரியவில்லை. 

தற்போது கோடை காலம் தொடங்க உள்ளதால் குப்பைகளில் அடிக்கடி தீ பிடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே அங்கேயே தீயணைப்பு வாகனத்தை தயாராக நிறுத்தி வைக்க வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story