குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்


குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
x
குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
தினத்தந்தி 1 Feb 2022 8:34 PM IST (Updated: 1 Feb 2022 8:34 PM IST)
t-max-icont-min-icon

குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பொள்ளாச்சி

மாசாணியம்மன் கோவில்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அம்மன் சயன நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மாசாணியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் தை அமாவாசையையொட்டி நடைபெறும் குண்டம் திருவிழா புகழ் பெற்றதாகும். இந்த விழா 18 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும்.
அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா தை அமாவாசையான நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்று விழாவையொட்டி நேற்று காலை 5.30 மணிக்கு முதற்கால அபிஷேக பூஜை நடைபெற்றது. இதையடுத்து தலைமை முறைதாரர் மனோகரன் தலைமையில் விரதம் இருந்த பக்தர்கள் குழுவினர் மூங்கில் கொடிமரத்துடன் உப்பாற்றங்கரைக்கு சென்றனர். அங்கு கொடிகம்பத்தை சுத்தம் செய்து, அதற்கு மாவிலை, மலர் மாலை, பூக்கள் தூவி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

கொடியேற்றம்

பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க 70 அடி நீள மூங்கில் கொடிமரத்தில் சிம்ம வாகனம் பொறித்த மஞ்சள் நிறகொடி கட்டப்பட்டது. இதை தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக கொடி மரத்தை தோளில் சுமந்து கோவிலுக்கு வந்தனர். காலை 8.30 மணிக்கு மாசாணியம்மன் கோவிலுக்கு கொடி மரம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து 8.45 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது.

அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘மாசாணி தாயே, மாசாணி தாயே’ என்று பக்தி கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் மாசாணியம்மன் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் கொடி கம்பத்திற்கு பால் அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன. அதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜை நடைபெற்றது. குண்டம் திருவிழாவையொட்டி வருகிற 19-ந்தேதி வரை அம்மனுக்கு காலை, மாலை நேரங்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற உள்ளது.

குண்டம் இறங்குதல்

ஆனைமலை ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்தில் வருகிற 14-ந்தேதி நள்ளிரவு 1 மணிக்கு மயான பூஜை நடக்கிறது. 15-ந்தேதி காலை 7.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், மாலை 6.30 மணிக்கு மகாபூஜை, 16-ந் தேதி காலை 10 மணிக்கு ஆனைமலை குண்டம் மைதானத்தில் குண்டம் கட்டுதல் நடைபெறுகிறது.
அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு சித்திரத்தேர் வடம்பிடித்தல், அம்மன் திருவீதி உலா ஆகியவை நடக்கிறது.

இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்படுகிறது. மறுநாள் 17-ந்தேதி காலை 9.30 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர். 18-ந்தேதி காலை 10.30 மணிக்கு மஞ்சள் நீராடுதலும், இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜையையும் நடக்கிறது. 19-ந்தேதி பகல் 11.30 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் விழா நிறைவடைகிறது.

போலீஸ் பாதுகாப்பு

முன்னதாக குண்டம் திருவிழா கொடியேற்று நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், அமுல்கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. கஸ்தூரிவாசு, தி.மு.க. கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கார்த்திக் அப்புசாமி, ஜி.கே.சுந்தரம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

கொடியேற்று விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக அரசு போக்கு வரத்துகழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் கருணாநிதி, கண்காணிப்பாளர் தமிழ்வாணன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
1 More update

Next Story