90 சதவீத மாணவ-மாணவிகள் வருகை
90 சதவீத மாணவ-மாணவிகள் வருகை90 சதவீத மாணவ-மாணவிகள் வருகை
பொள்ளாச்சி
கொரோனா பரவல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் கடைசியில் இருந்து பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக கடந்த மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன. பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் வகுப்பறைகளில் சமூக இடைவெளியுடன் மாணவ-மாணவிகள் அமர வைத்து பாடம் நடத்தப்பட்டது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் சுமார் 350 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கொரோனா பரவலுக்கு மத்தியில் இன்று (நேற்று) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. பள்ளிக்கு 90 சதவீத மாணவ-மாணவிகள் வந்திருந்தனர். மேலும் பள்ளிகளில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பெரும்பாலும் நேரடி வகுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. மாணவ-மாணவிகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் இருந்தால் பள்ளிக்கு வர வேண்டாம் என்றும், உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் விடுப்பட்ட மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இதை தவிர பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story






