‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 5 Feb 2022 8:01 PM IST (Updated: 5 Feb 2022 8:01 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9962818888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சுவர்களில் விரிசல்

நெகமம் மின்சார அலுவலகத்தின் மேற்புறத்தில் மின்வாரியத்திற்கு சொந்தமான பழைய கட்டிடங்கள் உள்ளன. இவை பராமரிப்பு இல்லாமல் பூட்டியே கிடக்கிறது. மேலும் கட்டிடத்தின் மேல்பகுதியில் மரங்கள் வளர்ந்து உள்ளதால், சுவர்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் கட்டிடம் பலம் இழந்து உள்ளது. மேலும் கதவு, ஜன்னல் அனைத்தும் பெயர்ந்து காணப்படுகிறது. எனவே பழைய கட்டிடங்களை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஜெயக்குமார், நெகமம்.

காய்ந்த மூங்கில்கள் அகற்றப்படுமா?

கூடலூர் கோடமூலா, அள்ளூர்வயல் பகுதியில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அவர்களது வீடுகளை சுற்றிலும் 40 ஆண்டுகளுக்கும் மேலான காய்ந்த மூங்கில்கள் உள்ளது. தற்போது கோடைகாலம் என்பதால் காட்டு தீ பரவும் அபாயம் உள்ளது. இதனால் வீடுகளுக்குத் தீ பரவும் ஆபத்து உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ந்த மூங்கில்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொம்மன், கூடலூர்.

பொது இடங்களில் குப்பைகள்

கூடலூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பொது இடங்களில் குப்பைகள் கொட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை மீறி பல இடங்களில் பொது இடங்களில் குப்பைகள் கொட்டப்படுகிறது. மேல்கூடலூரில் இருந்து ராஜகோபாலபுரம், காசிம்வயல், துப்புக்குட்டிபேட்டை வழியாக ஆற்று வாய்க்கால் செல்கிறது. இதில் கூடலூர் கிளை நூலகம் எதிரே குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் ஆற்று வாய்க்காலிலும் குப்பைகள் கொட்டப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சுகாதாரத்தை பேண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகேந்திரன், கூடலூர்.

விவசாயிகள் அவதி

சுல்தான்பேட்டை ஒன்றியம் வதம்பச்சேரியில் இருந்து ஓடக்கல்பாளையம் செல்லும் வழியில் பி.ஏ.பி. வாய்கால் மீது பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலம் மிக குறுகியதாக உள்ளதால், ஒரே நேரத்தில் லாரி, டிராக்டர் போன்ற கனரக வாகனங்கள் செல்ல முடியாது. ஒரு வாகனம் வரும்போது மற்றொரு வாகனம் வழிவிட்டு காத்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் விளைபொருட்களை வாகனத்தில் ஏற்றி செல்லும் விவசாயிகள் அவதி அடைகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பாலத்தை அகலப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

ராஜன், சுல்தான்பேட்டை.

தெருவிளக்குகள் இல்லை

கோவை பாப்பம்பட்டி கிராமத்தில் இருந்து பல்லடம் செல்லும் வழியில் கிருஷ்ணா கார்டன்-செந்தூர் நகர் சாலை இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அங்கு தெருவிளக்குகள் இ்ல்லை. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் அச்சப்படுகின்றன. மேலும் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரஜினி செந்தில், பாப்பம்பட்டி.

சுகாதார சீர்கேடு

கோவை வேலாண்டிபாளையத்தில் உள்ள சாக்கடை கால்வாயில் கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. அதில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் கொசு தொல்லை அதிகரித்து உள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த சாக்கடை கால்வாயை தூர்வார உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருண்ராஜ், வேலாண்டிபாளையம்.

மரக்கிளைகளை வெட்டப்படுமா?

காரமடை ஒன்றியம் சீலியூர் பஸ் நிறுத்தம் அருகே நான்கு புறம் இருந்தும்  இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அந்த இடத்தில் அடிக்கடி விபத்து நிகழ்கிறது. அங்கு வாகன ஓட்டிகளின் கண்களை மறைக்கும் வகையில் மரக்கிளைகள் சாலை வரை நீண்டு வளர்ந்து இருப்பதே விபத்துக்கு காரணமாக அமைகிறது. எனவே அந்த மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும். 

ராஜூ, சீலியூர். 

குப்பை கிடக்கில் அடிக்கடி தீ

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இதற்கு மாநகராட்சி நிர்வாகம் நிரந்தர தடுப்பு நடவடிக்கை எடுப்பதாக பல ஆண்டுகளாக கூறி வருகிறது. ஆனால் எந்த தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால் சுகாதார பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட நேரிடுகிறது. 

சுஜாதா, வெள்ளலூர்.

விபத்து அபாயம்

கோவை வி.கே.கே.மேனன் ரோடு ஆர்.ஆர். லே அவுட் சாலை சந்திப்புக்கு எதிரே சாலையின் நடுவில் 3 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் குப்பை தொட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது எனவே குப்பை தொட்டிகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணேசன், சித்தாபுதூர்.

பயணிகள் நிழற்குடை இல்லை

கோவை திருச்சி ரோட்டில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக ஒலம்பஸ் பகுதியில் இருந்த பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டது. தற்போது மேம்பால பணி நிறைவடைந்த நிலையில் பயணிகள் நிழற்குடை மீண்டும் அமைக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இங்கு மீண்டும் பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணன், ஒலம்பஸ்.


Next Story