போலீஸ் என்று கூறி வியாபாரி கடத்தல்


போலீஸ் என்று கூறி வியாபாரி கடத்தல்
x
தினத்தந்தி 6 Feb 2022 10:42 PM IST (Updated: 6 Feb 2022 10:42 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் கடையில் புகையிலை இருப்பதாக ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டியதுடன் போலீஸ் என்றுக்கூறி வியாபாரி கடத்தப் பட்டார். 5 பவுன் நகையுடன் தப்பிய கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

கோவை

கோவையில் கடையில் புகையிலை இருப்பதாக ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டியதுடன் போலீஸ் என்றுக்கூறி வியாபாரி கடத்தப் பட்டார். 5 பவுன் நகையுடன் தப்பிய கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள். 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மளிகை கடைக்காரர்

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துவேல் (வயது 35). இவர் தனது தாய் மற்றும் தம்பி முத்துராஜாவுடன் குறிச்சி சிட்கோ எம்.ஜி.ஆர்.நகர் முதல் வீதியில் தங்கி இருந்து அங்கு மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

 அதற்கு அருகில் முத்து ராஜா தனியாக மளிகை கடை வைத்து உள்ளார். 
இந்த நிலையில், முத்துவேல் கடையில் இருந் தார். அப்போது காரில் 4 பேர் வந்தனர். அவர்கள் தங்களை தனிப்படை போலீசார் என அறிமுகப்படுத்தி கொண்டனர். 

பின்னர் அவர்கள் புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்யப் படுகிறதா? என சோதனை செய்ய வேண்டும் என்று கூறி வீடு மற்றும் கடைகளில் சோதனை செய்தனர். அப்போது அங்கு புகையிலைப்பொருட்கள் இருந்ததாக தெரிகிறது. 

ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டல்

இதற்கிடையே அண்ணன் கடையில் சோதனை நடத்துவது குறித்து அறிந்ததும் முத்துவேலின் தம்பி முத்துராஜா அங்கு வந்தார். அப்போது போலீசார் என்று கூறியவர்கள் புகையிலைப் பொருட்கள் கடையில் இருந்ததால் விசாரிக்க வேண்டும், என்று கூறி முத்துராஜை காரில் அழைத்து சென்றனர். 

பின்னர் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் வைத்து ரூ.3 லட்சம் கொடுத்தால் வழக்குப்பதிவு செய்யாமல் விட்டு விடுகிறோம் என மிரட்டி உள்ளனர். பின்னர் அவரை திரும்பவும் வீட்டுக்கு அழைத்து வந்த கும்பல், வீட்டுக்குள் புகுந்து வங்கி புத்தகம், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை எடுத்து கொண்டு வெற்று காசோலையில் கையெழுத்து பெற்று உள்ளனர். 

காரில் கடத்தல்

மேலும் வீட்டில் இருந்த 5 பவுன் நகை, செல்போன் ஆகியவற்றை எடுத்துவிட்டு மீண்டும் முத்துராஜாவை காரில் கடத்தி சென்றனர். சுந்தராபுரம் எல்.ஐ.சி. காலனி அருகே வந்தபோது, செல்போனை முத்துராஜாவிடம் கொடுத்த கும்பல், அவரை காரில் இருந்து இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது. 

இதனால் அதிர்ச்சியடைந்த முத்துராஜாவுக்கு அதன் பின்னர் தான் அவர்கள் போலீஸ் இல்லை என்பது தெரியவந்தது. இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் தனிப் பிரிவை சேர்ந்த போலீசார் இல்லை என்பது தெரியவந்தது. 

போலீஸ் விசாரணை

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவதுடன், தப்பிச்சென்ற அந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

அத்துடன் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் இந்த சம்பவம் பதிவாகி உள்ளதா என்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். 


Next Story