தென்காசி மாவட்டத்தில் 413 பதவிகளுக்கு 1,840 பேர் போட்டி


தென்காசி மாவட்டத்தில் 413 பதவிகளுக்கு 1,840 பேர் போட்டி
x
தினத்தந்தி 8 Feb 2022 2:43 AM IST (Updated: 8 Feb 2022 2:43 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் 413 பதவிகளுக்கு 1,840 பேர் போட்டியிடுகின்றனர்.

தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், சுரண்டை, செங்கோட்டை, தென்காசி ஆகிய 6 நகராட்சிகள் உள்ளன. இதில் கடையநல்லூரில் 33 வார்டுகளுக்கு 212 மனுக்கள் பெறப்பட்டு 4 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 32 மனுக்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் 176 பேர் போட்டியிடுகின்றனர். 

புளியங்குடியில் 33 வார்டுகளுக்கு 132 மனுக்கள் பெறப்பட்டு 5 மனுக்கள் தள்ளுபடி ஆனது. 57 மனுக்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் 170 பேர் போட்டியிடுகின்றனர். சங்கரன்கோவிலில் 30 வார்டுகளுக்கு 171 மனுக்கள் பெறப்பட்டது, ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டு 14 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டு உள்ளது. இறுதியாக 156 பேர் களத்தில் உள்ளனர்.

சுரண்டையில் 27 வார்டுகளுக்கு 156 மனுக்கள் பெறப்பட்டது. ஒரு மனு தள்ளுபடி ஆனதுடன் 7 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. இதனால் 148 பேர் போட்டியில் உள்ளனர். செங்கோட்டையில் 24 வார்டுகளுக்கு 80 மனுக்கள் பெறப்பட்டது. 4 மனுக்கள் தள்ளுபடி, 8 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதால், 68 பேர் போட்டியில் உள்ளனர்.

தென்காசியில் 33 வார்டுகளுக்கு 206 மனுக்கள் பெறப்பட்டது. ஒரு மனு தள்ளுபடி ஆனதுடன் 18 பேர் மனுவை வாபஸ் பெற்றதால் இறுதியாக 187 பேர் களத்தில் உள்ளனர். மொத்தமுள்ள 6 நகராட்சிகளில் 180 வார்டுகளுக்கு 1,057 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 16 மனுக்கள் தள்ளுபடி ஆனது. 136 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. இதனால் இறுதியாக 905 பேர் களத்தில் உள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 17 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 260 வார்டுகளில் 1,181 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 208 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டு 939 பேர் போட்டியிடுகின்றனர். இதில் புதூரில் 2 வார்டுகளுக்கும், ராயகிரியில் 11 வார்டுகளுக்கும், சுந்தரபாண்டியபுரத்தில் 4 வார்டுகளுக்கும், திருவேங்கடத்தில் 2 வார்டுகளுக்கும், வாசுதேவநல்லூரில் 8 வார்டுகளுக்கும் என மொத்தம் 27 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆகமொத்தம் தென்காசி மாவட்டத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மொத்தம் 413 பதவிகளுக்கு இறுதியாக 1,840 பேர் களத்தில் உள்ளனர். 

Next Story