கும்மிடிப்பூண்டி அருகே வைக்கோல் ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு


கும்மிடிப்பூண்டி அருகே வைக்கோல் ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Feb 2022 9:56 PM IST (Updated: 8 Feb 2022 9:56 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே வைக்கோல் ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்ததால் லாரியில் ஏற்றப்பட்ட வைக்கோல் கட்டுகளை ரோட்டில் கீழே தள்ளி தீயை அணைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த அகரம் கிராமத்தில் இருந்து வைக்கோல் கட்டுகள் ஏற்றப்பட்ட மினி லாரி ஒன்று கும்மிடிப்பூண்டி நோக்கி நேற்று மதியம் வந்து கொண்டிருந்தது. அதனை காட்பாடியை சேர்ந்த டிரைவர் சரவணன் (வயது45) ஓட்டிச்சென்றார். வழுதிலம்பேடு அருகே லாரி வரும்போது, மரக்கிளையின் மீது வைக்கோல் படாமல் இருக்க லாரியை சாலையோரமாக டிரைவர் ஓட்டிச்சென்றார். அப்போது அந்த பகுதியின் சாலையோரம் இருந்த மின்கம்பியில் வைக்கோல் கட்டுகள் உரசியது.

இதனால் லாரியின் மீது ஏற்றப்பட்ட வைக்கோல் கட்டுகள் திடீரென மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இதனைக்கண்ட பொதுமக்கள் லாரி டிரைவரை எச்சரித்தனர். இந்த நிலையில், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சிறிது தூரம் லாரியை ஓட்டி சென்று அதனை டிரைவர் நிறுத்தினார். அப்போது லாரி கிளீனரும், பொதுமக்களும் சேர்ந்து லாரியில் ஏற்றப்பட்ட வைக்கோல் கட்டுகளை ரோட்டில் கீழே தள்ளி விட்டனர். மேலும் கீழே விழுந்த வைக்கோல் கட்டுகள் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்த நிலையில், கும்மிடிப்பூண்டி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் லாரியில் தீப்பிடிக்காமல் இருக்க அதன் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதனால் லாரி தீயில் எரிந்து சேதம் ஆகாமல் தப்பியது.

இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story